கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..!! 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!! சென்னை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம், விஷச் சாராயம் குடித்து 69 பேர் பலியான விவகாரத்தில் 18 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி 18 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம். ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கால தாமதமாக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதையும், ஆவணங்கள் முறையாக வழங்கப்படவில்லை என்பதையும் முன்வைத்து வாதிட்டனர்.
இதையடுத்து, கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் 6 மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ள நிலையில், அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் வைத்திருப்பதில் என்ன தேவை இருக்கிறது..? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கள்ளச்சாராய விற்பனை பல ஆண்டுகளாக நடக்கும் நிலையில், மது விலக்கு துறை என்ன செய்து கொண்டிருக்கிறது..? மது விலக்கு போலீசார் பதிவு செய்யும் வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஜோடிக்கப்பட்டவையாக உள்ளது என்று தெரிவித்தனர்.
கல்வராயன் மலைப் பகுதியில் தயாரிக்கப்படும் கள்ளச்சாராயத்தை இத்தனை ஆண்டுகளாக தடுக்காமல் மது விலக்கு பிரிவு என்ன செய்து கொண்டிருந்தது..? மேலும், இந்த விவகாரத்தில் அரசின் தோல்வியையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மது விலக்கு பிரிவு போலீசார் பல தவறுகளை செய்வதாகவும் அவ்வாறு தவறிழைக்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில், அரசு மற்றும் மனுதாரர்களின் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 18 பேர் மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.