கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐ... அடுத்த வாரம் உயர் நீதிமன்றம் விசாரணை...!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய அனைத்து வழக்குகளும் அடுத்த வியாழன் அன்று விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில்கள்ளச் சாராயத்தை குடித்து 60-க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது வரை 20-க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் தொடர்பாக அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை, பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு, பாஜக சார்பில் வழக்கறிஞர் ஏ.மோகன் தாஸ் ஆகியோர் சிபிஐ விசாரணை கோரி ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.
வழக்கு கடந்த வாரம் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவின் அறிக்கையை கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், “சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மாவட்ட கலெக்டர் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு நேரில் சென்று நடவடிக்கை எடுத்தார்.
மேலும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சம்பவம் தொடர்பான வருவாய்த்துறையினர் உடனடியாக விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கபட்டுள்ளது என்றார். இந்த வழக்கில் தமிழக காவல்துறை சிறப்பாக விசாரித்து வரும் நிலையில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். இதை அடுத்த வழக்கு விசாரணை ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய அனைத்து வழக்குகளும் அடுத்த வியாழன் அன்று விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.