BREAKING | பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.5,000..!! கல்விக் கட்டணம் இலவசம்..!! முதல்வர் அறிவிப்பு..!!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சம்பவத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.5,000 வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில், உடல்நலம் பாதிக்கப்பட்டு 19ஆம் தேதி இரவு 11 மணி நிலவரப்படி 17 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை நிலவரப்படி, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40ஆக இருந்தது. இதில் 3 பேர் பெண்களும் அடங்குவர்.
உயிரிழந்தவர்களில் 31 பேரின் உடல்கள், உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன. கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் மட்டும் 26 பேர் உயிரிழந்ததால் அந்தப் பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அப்பகுதியில், மேலும் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர்களும் அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அந்த வகையில், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மரில் 168 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதில் 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று (ஜூன் 21) கள்ளச்சாராய சம்பவத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.5,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடையும் வரை, பாதுகாவலர்களின் மாத பராமரிப்புத் தொகையாக இந்த ரூ.5,000 வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். பெற்றோர் இருவரையும் அல்லது ஒருவரை இழந்துள்ள குழந்தைகளுக்கு இந்தத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அவர்கள் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் என அனைத்து கட்டணங்களையும் அரசே வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Read More : கள்ளச்சாராய மரணம் 50ஆக உயர்வு..!! மேலும் பலர் கவலைக்கிடம்..!! கதறும் கள்ளக்குறிச்சி..!!