வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர்..!! நீர் பீய்ச்சி அடிக்க உயர்நீதிமன்ற கிளை அதிரடி கட்டுப்பாடு..!!
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வில் நீர் பீய்ச்சி அடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை விழா ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 22ஆம் தேதி சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்வும் அதனைத் தொடர்ந்து அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. வருகிற 23ஆம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ள நிலையில், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது பலரும் ஆற்றங்கரை ஓரம் இருந்து வாசனை திரவியங்கள் கலந்த தண்ணீரை கள்ளழகர் மீது பீய்ச்சி அடிப்பது வழக்கம். அத்துடன் உயரழுத்தம் கொண்ட மோட்டார்கள் மூலமும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இதன் காரணமாக கள்ளழகர் சிலை மற்றும் ஆபரணங்களுக்கு சேதம் ஏற்படும் எனவும் பக்தர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதால் மக்கள் சிரமப்படுவார்கள் என்றும் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்நிலையில், கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின்போது உயர் அழுத்த மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சி அடிக்கத் தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. பாரம்பரிய முறையில், தோல் பை வைத்து மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும். அவ்வாறு தண்ணீர் பீய்ச்சுபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். கள்ளழகர், அழகர் மலையில் இருந்து வைகை ஆறு வரும் வரை இடையே எந்த இடத்திலும் தண்ணீர் பீச்சி அடிக்கக் கூடாது. இதனை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், ஆணையரும் உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மீது தண்ணீர் பீச்சி அடிப்பதை காவல்துறையினர் அனுமதிக்கக் கூடாது என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமினாதன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
Read More : பிஎஃப் பயனர்களுக்கு குட் நியூஸ்..!! அதிரடியாக வந்த மாற்றம்..!! இனி அந்த டென்ஷன் வேண்டாம்..!!