முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஜூன்-4 தேர்தல் முடிவுகள்... அன்றைய நாளில் வெற்றிக் கொடி...! முதல்வர் ஸ்டாலின் கடிதம்

02:10 PM May 26, 2024 IST | Vignesh
Advertisement

ஜூன்-4 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்றைய நாளில் வெற்றிக் கொடி ஏற்றுவோம். ‘இந்தியா’வின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம்.

முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “நம் இதயத்துடிப்பாகவும், குருதி ஓட்டமாகவும் இருந்து ஒவ்வொரு நாளும் நம்மை இயக்கிக் கொண்டிருப்பவர் கலைஞர். அவர் நம்மை இயக்குவதால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கத்தை நம்மால் அவர் வகுத்துத் தந்த பாதையில் வெற்றிகரமாக இயக்க முடிகிறது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அரசியல் வரலாற்றிலேயே கலைஞரை போன்ற பொதுவாழ்வில் சளைக்காமல் உழைத்து, சாதனைகள் பல படைத்த தலைவரைக் காண்பது அரிது.

Advertisement

இந்திய வரைபடத்தில் தேடவேண்டிய ஒரு குக்கிராமமான திருக்குவளையில் பிறந்து, திருவாரூர் எனும் சிறிய நகரில் பயின்று, 14 வயதில் மாணவப் பருவத்திலேயே மொழி-இன உணர்வுடனான கொள்கை வழி நடந்து, பெரியார்-அண்ணா எனத் தன் தலைவர்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் கடுமையாக உழைத்து, போராட்டக் களத்திற்கு அஞ்சாத வீரனாக, சிறைத் தண்டனையைச் சிரித்த முகத்துடன் ஏற்கும் தீரனாக, படைப்பாற்றல் மிக்க இளந்தலைவராக, எந்நாளும் மக்களுடன் இணைந்திருப்பவராகத் திகழ்ந்தவர் கலைஞர்.

முதன் முதலில் தேர்தல் களம் கண்ட 1957 முதல், இறுதியாகத் தேர்தல் களம் கண்ட 2016 வரை 13 தேர்தல்களில் தொடர் வெற்றியைப் பெற்ற இந்திய அரசியல் தலைவர் கலைஞர் மட்டுமே. 5 முறை தமிழகத்தின் முதலமைச்சர். அளப்பரிய திட்டங்கள், இந்தியாவுக்கே முன்னோடியான சாதனைகள், இந்திய அரசியலில் முக்கியப் பங்காற்றிப் பல குடியரசுத் தலைவர்களையும் பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கத் துணைநின்ற அரசியல் ஆளுமை. இத்தனைத் திறமைகளும் இவ்வளவு சாதனைகளும் ஒருங்கே பெற்ற ஒரே தலைவர் கலைஞர் தான்.

அவர் நம்மை நாள்தோறும் இயக்கும்போது, நம் உழைப்பும் அவரிடம் பெற்றதாகவே இருக்கும். நம் இயக்கமும் அவர் வழிகாட்டிய திசையில் நடக்கும். கழக ஆட்சியும் அவரது ஆட்சி போலவே சாதனைத் திட்டங்களால் வரலாறு படைக்கும். அதனால்தான் 2023 ஜூன் 3-ம் நாள் தொடங்கிய தலைவர் கலைஞரின் நூற்றாண்டு 2024 ஜூன் 3 அன்று நிறைவடையும் நிலையில் கடந்த ஓராண்டு முழுவதும் சாதனைத் திட்டங்களாலும், மக்களுக்குப் பயன் அளிக்கும் செயல்களாலும் அவரது நூற்றாண்டைக் கொண்டாடியிருக்கிறோம்.

தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், அலங்காநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு நினைவு ஏறுதழுவுதல் அரங்கம், சென்னை கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், சென்னை மெரினா கடற்கரையில் வரலாற்று ஆவணமாகக் கலைஞர் நினைவிடம் உள்ளிட்டவை கடந்த ஓராண்டில் நிறைவடைந்து கம்பீரமாக அமைந்துள்ளன.

மே 29, 2023 எழுதிய கடிதத்தில், “ஜூன் 3, கலைஞரின் 99-வது பிறந்தநாள். அன்றைய தினம் தமிழ்நாடெங்கும் எழுச்சியோடும் ஏற்றத்தோடும் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட வேண்டும் என்று நேற்று காலையில் (மே 28) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, திமுகவின் இருவண்ணக் கொடி ஏற்றும் விழாக்கள் ஆகியவை மாவட்ட அளவில் தொடங்கி, கிளைகள்தோறும் நடத்தப்பட வேண்டும்.

ஒரு நாளோடு முடிந்துவிடுவதில்லை கலைஞர் பிறந்தநாள். அவர் நிறைவேற்றிய சிறந்த திட்டங்களையும், அவர் கற்றுத் தந்த ஆட்சிக்கான இலக்கணத்தின்படி தொடர்கின்ற 'திராவிட மாடல்' அரசின் கடந்த ஓராண்டு கால சாதனைகளையும் மக்களிடம் ஒவ்வொரு நாளும் எடுத்துச் சென்றிட வேண்டும். திமுகவின் இளைய தலைமுறையினரின் நெஞ்சில் அவற்றைப் பதியச் செய்திட வேண்டும். அமைதி தவழும் சமூகநீதி நிலமான தமிழ்நாட்டில் மதவெறி அரசியலுக்குத் துளியும் இடம் கொடுக்காத வகையில், சுயமரியாதை உணர்வையும் சமத்துவச் சிந்தனையையும் மேலும் மேலும் வளர்த்தெடுக்கும் விதத்தில் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் அமைந்திட வேண்டும்“ என்று அதன் இறுதிப் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்.

ஜூன் 7 அன்று சென்னையில் மிகப் பிரம்மாண்டான வகையில் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் மாநாடு போல நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த ஓராண்டு காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிற மாநிலங்களிலும் கலைஞரின் நூற்றாண்டைக் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.பேரறிஞர் பெருந்தகை அண்ணா உருவாக்கிய திமுகவை ஊர்கள்தோறும் வளர்த்தெடுத்தவர் கலைஞர். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கழகத்தை அரை நூற்றாண்டு காலம் கட்டிக்காத்து வலிமைப்படுத்தியவரும் கலைஞர்தான். அவருடைய நூற்றாண்டில் கழகத்தை மேலும் வலிமைப்படுத்தும் வகையில், புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் செயல்திட்டமும் வகுக்கப்பட்டு, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு சராசரியாக 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததாலும் கலைஞர் நூற்றாண்டினையொட்டி நாம் திட்டமிட்டிருந்த ஒரு சில செயல்பாடுகள் முழுமை பெற இயலவில்லை. எனினும், தேர்தல் பணியும்கூட கலைஞரின் புகழ் போற்றும் பணியாகவே இருந்தது.இந்தியாவில் ஜனநாயகத்திற்கு நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் வடஇந்தியத் தலைவர்களின் பார்வை தெற்கை நோக்கித் திரும்பியதும், அவர்களின் எதிர்பார்ப்பிற்குரிய தலைவராக கலைஞர் அவர்கள் செயலாற்றியதும், அதன் காரணமாக ஜனநாயகம் மீட்கப்பட்டு, ஆட்சியில் நிலைத்தன்மை ஏற்பட்டதையும் எவரும் மறுக்க முடியாது. கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி, மாநில சுயாட்சியின் குரலை இந்திய அளவில் முன்னெடுத்தவர் கலைஞர்.

ஜூன்-3 அன்று கலைஞர் பிறந்தநாள். தேர்தல் நடத்தை முறைகளைக் கவனத்தில் கொண்டு, மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். கலைஞர் நூற்றாண்டு நிறைவுறும் இந்த ஜூன்-3 அன்று மக்கள் கூடும் இடங்களில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலையிட்டு, அனைத்துக் கொடிக்கம்பங்களிலும் கொடிகளைப் புதுப்பித்துக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும். திமுகவினர் தங்கள் இல்லங்களுக்கு முன்பாக ‘கலைஞர் 100’ என்ற வரியுடன் கோலமிட்டு கலைஞரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும்.

உள்ளூர் மைதானங்களில் இளைஞர்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்திப் பரிசுகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். ஜூன்-4 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்றைய நாளில் வெற்றிக் கொடி ஏற்றுவோம். ‘இந்தியா’வின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம். தமிழ் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும் கலைஞரின் நூற்றாண்டின் தொடர்ச்சியை இந்திய அளவில் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.

Tags :
ChennaiDmkJune 4mk stalin
Advertisement
Next Article