5-லிருந்து 50 வரை பாடாய்படுத்தும் மூட்டு வலி.! காரணம், அறிகுறிகள் மற்றும் தீர்வு என்ன.?
மூட்டு வலி என்பது பலதரப்பட்ட வயதினருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான ஒரு பிரச்சனையாகும். ஆண்கள் மற்றும் பெண்கள் என பலரும் மூட்டு வலியால் அவதிப்படுவதை பார்த்திருப்போம். இவற்றால் முழங்கால்களில் கடுமையான வீக்கம் ஏற்படுகிறது மற்றும் கடுமையான வலியால் நமது அன்றாட பணிகள் தடைபடும். இவற்றிற்கு உரிய சிகிச்சை எடுத்து இவற்றை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும். மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பொதுவாக மூட்டு வலி என்பது பல காரணங்களால் ஏற்படலாம். எனினும் அவை ஏற்படுகின்ற இடங்கள் மற்றும் வலிகளின் தாக்கத்தை பொறுத்து சில காரணங்களை இங்கே பார்ப்போம். அதிகப்படியான வேலை பளு, சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் மற்றும் அதிகப்படியான நடை ஆகியவற்றின் காரணமாக மூட்டுகளிலிருக்கும் தசை நார்களில் அழுத்தம் ஏற்பட்டு திசுக்களில் வீக்கம் தேய்வு ஏற்படலாம். மேலும் முழங்கால்களில் ஏற்படும் அதிர்ச்சி காயங்கள் போன்றவையும் மூட்டு திசைனார்களை சேதப்படுத்தலாம். இதன் காரணமாகவும் மூட்டு வலி ஏற்படும். பொதுவாக மூட்டு வலி ஏற்படும் பகுதிகளில் வீக்கம் மற்றும் வலி இருக்கும். அந்த இடங்கள் சிவப்பாக இருப்பதோடு அதிக வெப்பமாகவும் இருக்கும். மேலும் மூட்டுகளில் உறுதியற்ற தன்மை காணப்படும். இவை மூட்டு வலியின் அறிகுறிகள் ஆகும்.
பெரும்பாலும் மூட்டு வலிகளுக்கு மருந்து மாத்திரைகள், ஓய்வு மற்றும் சிறு உடற்பயிற்சிகளின் மூலம் தீர்வு காணலாம். எனினும் ஒரு சில தீவிர மூட்டு வலிகளுக்கு அறுவை சிகிச்சையே தீர்வாக இருக்கும். மூட்டு வலிகள் தீவிரமடையும்போது கார்டிகோ ஸ்டெராய்டு ஊசிகள் மற்றும் ஹைலூரோனிக் ஊசிகள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் வலியை கட்டுப்படுத்துவதோடு இயக்கத்தையும் மேம்படுத்த முடியும். எனினும் இவற்றால் பக்கவிளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மாத்திரைகள் மற்றும் ஊசிகளுக்கும் வலி கட்டுப்படவில்லை என்றால் அறுவை சிகிச்சையே இறுதி தீர்வாக இருக்கும்.