ஜூன் 25-27 வரை நடக்க இருந்த கூட்டு சிஎஸ்ஐஆர்-யுஜிசி-நெட் தேர்வு ஒத்திவைப்பு..! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!
ஜூன் 2024 இல் திட்டமிடப்பட்ட கூட்டு சிஎஸ்ஐஆர்-யுஜிசி-நெட் தேர்வை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு அறிவியல் பாடங்களில் ஜூனியர் பெல்லோஷிப் திட்டங்களுக்கு விண்ணப்பதாரர்களின் தகுதியைத் தீர்மானிக்கிறது.
இது குறித்து NTA வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "2024 ஆம் ஆண்டு ஜூன் 25 முதல் ஜூன் 27 ஆம் தேதிக வரை திட்டமிடப்பட்ட கூட்டு CSIR NET தேர்வு தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் மற்றும் தளவாடச் சிக்கல்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான திருத்தப்பட்ட அட்டவணை இந்தத் தேர்வு நடத்தப்படும் என்பது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
UGC-NET ரத்து செய்யப்பட்டது: இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெருவதற்கான தகுதியைத் தீர்மானிப்பதற்காக தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் வந்ததைத் தொடர்ந்து UGC-NET தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஜூன் 19ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருந்த ஓரிரு தினங்களில் கூட்டு சிஎஸ்ஐஆர்-யுஜிசி-நெட் தேர்வை ரத்து செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் UGC-NET புதிய தேர்வு தேதி குறித்த அறிவிப்பு தனியாக வெளியிடப்படும் என்றும், இந்த முறைகேடுகள் குறித்த விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருந்தது.
CSIR UGC-NET: ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்(JRF), உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் பிஎச்டி சேர்க்கைக்கான இந்திய குடிமக்களின் தகுதியை யுஜிசி வகுத்துள்ள தகுதிக்கு ஏற்ப, கூட்டு சிஎஸ்ஐஆர் யுஜிசி-நெட் நடத்தப்படுகிறது.