தாமரையா.? இரட்டை இலையா,? பாராளுமன்றத் தேர்தலில் களம் இறங்கும் அரசியல் தலைவரின் மகள்.! வெளியான முக்கிய அறிவிப்பு.!
தென் தமிழகத்தில் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் ஜான் பாண்டியன். இவர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை நிறுவி அதன் தலைவராகவும் இருந்து வருகிறார். கடந்த தேர்தல்களில் ஜான்பாண்டியன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்சி, அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கூட்டணியை ஆதரித்து வந்தது. தற்போது அதிமுக பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டிருப்பதால் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கூட்டணியை தேர்வு செய்வது குறித்து கட்சி நிர்வாகிகள் இடையே வாக்கெடுப்பும் நடத்தப்பட்டிருக்கிறது. மேலும் அதிமுக மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் தமிழக முன்னேற்றக் கழகத்தை அணுகி கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. விரைவிலேயே கூட்டணி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என அதன் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார் . மேலும் தமிழகத்தில் தங்களுக்கு சாதகமான ஐந்து தொகுதிகள் பற்றிய பட்டியல் தயார் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார் .
இந்நிலையில் ஜான் பாண்டியன் மகள் வினோலின் நிவேதா பாண்டியன், பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மருத்துவரான இவர் தனது தந்தையின் வழிகாட்டுதலின்படி கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். மேலும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி தலைவியாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் தனது தந்தை ஜான்பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனுமதி அளித்தால் வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தான் அரசியலில் தனக்கு முன்னோடி என தெரிவித்த வினோலின், ஜெயலலிதாவை போல் விவேகமான மற்றும் துணிச்சலான அரசியல்வாதியாக இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இவர் தனக்கு விருப்பமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவாரா அல்லது தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவாரா என்பது அவர்களது கட்சியின் கூட்டணியை பொறுத்தே முடிவு செய்யப்படும்.