"என்னால் முடிந்ததை நாட்டிற்கு செய்துவிட்டேன்..!!" - கண்கலங்கிய அதிபர் ஜோ பைடன்
அமெரிக்காவில் இன்னும் மூன்று மாதங்களில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதேசமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்று முதலில் கூறப்பட்ட நிலையில், அவரின் சமீபகால உடல்நல தளர்வு, ஊடக நேர்காணல்களில் உளறுவது போன்ற செயல்கள் விமர்சனத்துக்குள்ளாகவே, துணை அதிபர் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கமலா ஹாரிஸ் வெற்றிபெற்று அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபர் என்ற சாதனை படைப்பார் என ஆளும் ஜனநாயக கட்சியினர் நம்புகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோவில் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் (நேற்று), மக்கள் நிறைந்த அரங்கத்தில் உரையாற்றினார் பைடன். அவர் பேசுகையில் 2020 மற்றும் 2024 அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் தான் எழுப்பிய பிரச்னைகள் குறித்தும், ஜுலை மாதத்தில் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகியது குறித்தும் பேசினார்.
அவர் பேசுகையில், "உங்களில் பலரைப் போலவே, நானும் என் இதயத்தையும் ஆன்மாவையும் இந்த தேசத்திற்காக கொடுத்துள்ளேன்," என்று அவர் கூறினார். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அவர் நிகழ்த்திய உரையின் முடிவில் "நன்றி, ஜோ" போன்ற பைடனுக்கு ஆதரவான குரல்கள் அரங்கம் முழுவதும் ஒலித்தது.
தொடர்ந்து, கமலாவை எனது துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்ததே, நான் அதிபர் வேட்பாளர் ஆனவுடன் எடுத்த முதல் முடிவாகும். அதுமட்டுமல்லாது இது எனது அரசியல் பயணத்தில் நான் எடுத்த சிறந்த முடிவும் அதுதான். கமலா மிகவும் தைரியமான, அனுபவம் வாய்ந்த பெண். அவரிடம் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் உள்ளது." என்றும் அவர் கூறினார். மேடையேறிய பைடன், தனது மகள் ஆஷ்லியை ஆரத்தழுவி, தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்ததைக் காண முடிந்தது.
அதனைத்தொடர்ந்து பேசிய கமலா ஹரீஷ், "ஜோ, உங்கள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தலைமைக்கும், எங்கள் தேசத்திற்கான உங்கள் வாழ்நாள் சேவைக்கும், நீங்கள் தொடர்ந்து செய்யப்போகும் அனைத்திற்கும் நன்றி, நாங்கள் உங்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்." என்று கூறினார்.
Read more ; உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நாளை நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்..!!