JN.1 தீவிர பரவல்!... குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?… இதெல்லாம் சொல்லிக்கொடுங்கள்!
இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. 656 பேருக்கு புதிய கொரோனா தொற்று கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ளது. எனவே நிபுணர்கள் இதுகுறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். புதிய வகை ஜேஎன்1 கொரோனா நாடு முழுவதும் கிடுகிடுவென பரவி வருகிறது. எனவே குழந்தைகளையும், முதியோரையும் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இவர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
குழந்தைகளின் சுவாச உறுப்புகளில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்படாமல் பாதுகாப்பாக அவர்களை வைத்துக்கொள்ள வேண்டும். இது ஏற்கனவே குளிர் காலமாக இருப்பதால் வழக்கமான இருமல் மற்றும் சளியில் இருந்து அவர்களை பாதுகாப்புடன் வைக்க வேண்டும்.
மாஸ்க் அணிவதும், சமூக இடைவெளியும் மிகவும் முக்கியம்
சோப்பு மற்றும் தண்ணீரை வைத்து கையை கழுவுவதை வழக்கமாக்க வேண்டும். குறைந்தபட்சம் 20 நொடிகள் வரை கைகளை தேய்த்து கழுவினால்தான் கைகளில் உள்ள கிருமிகள் நீங்கும். குழந்தைகளுக்கு அவர்களின் முகத்தை தொடக்கூடாது என கற்றுக்கொடுக்க வேண்டும். குறிப்பாக கண்கள், மூக்கு, வாய் என எந்த பாகத்தையும் தொடக்கூடாது என்று அவர்கள் பழக வேண்டும்.
கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் மாஸ்க் அணிய பழக்க வேண்டும். உள்ளூர் வழிகாட்டு நெறிமுறைகளை அவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு பொருந்தக்கூடிய மாஸ்குகளை அணிவித்து, அவர்கள் அதை தொடர்ந்து பயன்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். மாஸ்க் அணிவதன் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு உணர்த்த வேண்டும். குழந்தைகளுக்கு சமூக இடைவெளி குறித்து அறிவுறுத்த வேண்டும். ஒருவரிடம் நாம் எத்தனை தொலைவில் இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு இருப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தெரியப்படுத்துங்கள். பொது இடங்களில் அவர்கள் ஏன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துங்கள்.
அவர்களுக்கு சுகாதாரமான பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளி ஆகியவை அவர்களுக்கு நேர்மறையான உதாரணமாக திகழும். இது தனிநபர் பாதுகாப்பை வலியுறுத்துபவை மட்டுமல்ல மற்றவர்களின் பாதுகாப்புக்கும் உறுதியளிப்பவை. உங்கள் வீட்டிற்கு அருகில் யாரோனும் கோவிட்டால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்றால், குழந்தைகளை வீடுகளுக்குள் விளையாட அறிவுறுத்துங்கள். அவர்களின் பங்களிப்பும் கோவிட் பரவாமல் இருப்பதற்கான காரணங்களுள் ஒன்று என்று அவர்களுக்கு விளக்கிக்கூறுங்கள். அவர்களின் கைகளை கழுவி எப்போதும் சுகாதார பழக்கவழக்கங்களை பழக்குங்கள்.
சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல், மயக்கம், சோர்வு, தொண்டை கம்மல், வயிற்றுப்போக்கு, சுவையிழப்பு, மணமிழப்பு என அனைத்தும் தென்பட்டாலோ அல்லது கோவிட் அறிகுறிகளான இவற்றுள் ஏதேனும் ஒன்று தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். உங்களை தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை உட்கொண்டு, நல்ல சுகாதார பழக்க வழக்கத்தை பின்பற்றி குணமடையுங்கள். ஏதேனும் அறிகுறிகள் தோன்றுகிறதா என்பதை எப்போதும் உற்று கண்காணியுங்கள். குழந்தைகளுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவரின் அறிவுரைப்படி மருந்து கொடுத்து பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளுங்கள்.
வெளியில் விளையாட அழைத்துச்செல்லுங்கள். குறைவான எண்ணிக்கையிலான நபர்களுடன் மட்டுமே விளையாட அனுமதியுங்கள். வீடு மற்றும் சுற்றுப்புறம் எப்போது சுத்தமாக இருப்பதை உறுதியாக்குங்கள். கோவிட் 19 குறித்து குழந்தைகளை பேச அனுமதிக்க வேண்டும். யாருக்கேனும் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் அவர்கள் உங்களிடம் தெரிவிக்க பழக்க வேண்டும். இது உங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு உதவும். இதுவும் தொற்றை தடுக்க உதவும்.