JN.1 தீவிரத்தை உணருங்கள்!… கட்டுப்பாடுகளை கட்டாயமாக்கும் மாநில அரசுகள்!… எந்தெந்த மாநிலங்களில் என்னென்ன கட்டுப்பாடுகள்?
கொரோனா வைரஸின் புதிய பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 2020ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது போல் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் கேரளா 3, கர்நாடகா 2, பஞ்சாப் 1 ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள். அதாவது ஏற்கனவே சீரியசான உடல்நலப் பாதிப்புகள் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இது உயிரிழப்புகளில் கொண்டு போய் விட்டுள்ளது. எனவே கொரோனா வைரஸால் சீரியசான பாதிப்புகள் ஏற்படவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தி பாசிடிவ் என்று வந்தவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கின்றன. இவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உரிய கண்காணிப்பில் இருக்கின்றனர். புதிய பாதிப்புகள் என்று எடுத்து கொண்டால் நேற்று ஒரே நாளில் 594 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய பரவலுக்கு காரணம் பிரோலா உருமாறிய வைரஸ் எனப்படும் ஜே.என்.1 வைரஸ் தான். இது அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வைரஸை Variant of Interest என்று உலக சுகாதார நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. அதாவது, மிகவும் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இது வேகமாக பரவக் கூடியதாக இருந்தாலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் எளிதில் தடுக்க முடியும் என்று வரையறை செய்திருக்கிறது. சர்வதேச அளவிலும் பெரிதாக அச்சப்படத் தேவையில்லை என்ற பார்வை தான் உள்ளது.
இருப்பினும் பல நாடுகளில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் சற்று எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலைமை இப்படி சென்று கொண்டிருக்க முதல்கட்டமாக பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் பயணம் செய்வதன் மூலமே பலருக்கும் நோய்த்தொற்று பரவுகிறது. இதனை 2020, 2021 ஆகிய காலகட்டங்களில் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.
இந்தியாவில் இதுவரை கொரோனாவின் மூன்று அலைகள் ஏற்பட்டுள்ளன. நான்காவது அலை வந்து விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதற்கு ஜே.என்.1 வைரஸ் வழி ஏற்படுத்தி தருமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது. இந்தியாவில் ஜே.என்.1 வைரஸ் பாதிப்புகள் 21ஆக பதிவாகி இருக்கிறது. அதில் கோவா (19), கேரளா (1), மகாராஷ்டிரா (1) ஆகிய மாநிலங்கள் அடங்கும். சமூகப் பரவலாக இதுவரை மாறவில்லை.
லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுகின்றன. அதுவும் விரைவில் குணமடைந்து விடுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய சூழலில் நிலைமையை தொடர்ச்சியாக கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர். தொற்று பரவல் அடுத்தகட்டத்திற்கு செல்லும் பட்சத்தில் உரிய தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளனர்.
அந்தவகையில், புதிய வகை கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து பல மாநிலங்கள் மாஸ்க் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்திவருகிறன. அந்தவகையில், கர்நாடக மாநிலத்தில், கொரோனா தொற்று பரவல் தொடர்பான விதிமுறைகளை அமல்படுத்தி முக்கிய முடிவுகளை எடுக்க, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் அமைச்சரவை துணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், 60 வயதுக்கு மேற்பட்டோர், பல நோய்களால் அவதிப்படுவோர் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, அவ்வப்போது கைகளை சுத்தம் செய்வது, கூட்டமிக்க பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்தல் உட்பட ஆலோசனைகளை பள்ளி நிர்வாகங்கள் பெற்றோருக்கு தெரிவித்துள்ளன. பொது இடங்களில் இனி அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், பொது இடங்களில் இனி அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்களுக்கு சண்டிகர் நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் மருத்துவமனைகளில் பணிபுரியும் போது உதவியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்கள் முகக்கவசம் அணிவதையும் நிர்வாகம் கட்டாயமாக்கியுள்ளது. கூட்டம் அதிகம் கூடும் பகுதிகளை முடிந்தவரை தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் யாருக்கேனும், சளி அல்லது சிறிய வைரஸ் தொற்று இருந்தாலும் மருத்துவர்களை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கர்ப்பிணிகள், வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிவது அவசியம் என, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.