ஜெயலலிதா மரண விவகாரம்..!! விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தக் கூடாது..!! உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு..!!
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2016ஆம் ஆண்டு நீண்ட நாள்கள் சிகிச்சைக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார். அவரது மரணம் பல்வேறு சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் எழுப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து உத்தரவிட்டார்.
இந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை 5 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே, ஆறுமுகசாமி ஆணையம் சமர்பித்த அறிக்கையில் வெளியிட்ட கருத்துகளை நீக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளை அறிக்கையில் இருந்து நீக்க நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவரிடம் விசாரணை நடத்தவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.