ஜம்மு-காஷ்மீர் பயங்கரம்!… பாதுகாப்பு படையினரிடன் அதிரடி நடவடிக்கைகள்!… ஒரே ஆண்டில் 76 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு-காஷ்மீரில் 2023ம் ஆண்டில் 55 வெளிநாட்டு தீவிரவாதிகள் உள்பட 76 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று காவல்துறைத் தலைவர் ஆர்.ஆர்.ஸ்வைன் தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீரில் நாளுக்கு நாள் தீவிரவாத செயல்கள் அரங்கேறிவருகிறது. தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதும், இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுப்பதும் வழக்கமாக இருந்துவருகிறது. இருப்பினும், தீவிரவாதிகளின் தாக்குதலில் பல ராணுவ வீரர்களும் வீர மரணம் அடைகின்றனர். தீவிரவாதிகளும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்படுகிறார். இதனால், எங்கு எப்போது என்ன நடக்கும் என்று தெரியாமல் மாநிலத்தில் மக்கள் அச்சத்திலேயே இருந்துவருகின்றனர். இப்படி இருக்கையில், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் மூலமாக 2023ம் ஆண்டில் மட்டும் 55 வெளிநாட்டு தீவிரவாதிகள் உள்பட 76 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறைத் தலைவர் (டிஜிபி) ஆர்.ஆர்.ஸ்வைன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 291 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதோடு, அவர்களுக்குத் உதவி புரிந்ததாக 201 பேர் மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2023ல் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 6 காவல் துறையினர் உட்பட 14 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தீவிரவாத நடவடிக்கைகள் 63 சதவீதம் அளவுக்கு குறைந்திருந்தது. தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளும், பாதுகாப்புப் படையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் முன்னெப்போதும் இல்லாத அளவில் குறைந்துள்ளது.
நடப்பாண்டில் 89 தீவிரவாத சம்பவ முயற்சிகள் முறியடிக்கப்பட்டதோடு, தீவிரவாதிகளின் 18 மறைவிடங்கள் அழிக்கப்பட்டன. மேலும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களின் ரூ. 170 கோடி மதிப்பிலான நிலம், குடியிருப்புகள் உள்ளிட்ட 99 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவர்களின் 68 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகளை வெளியிட்ட 8,000 போலி சமூக ஊடக கணக்குகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என்றார்.