ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் ராணுவ கேப்டன் வீரமரணம்..!!
காஷ்மீரின் தோடாவில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் வீர மரணம் அடைந்தார். பதுங்கியுள்ள 4 பயங்கரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் தூண்டுவிடும் பயங்கரவாதிகள் அழித்தொழிக்கப்பட்டாலும் பாதுகாப்புப் படையினரும் வீரமரணம் அடைந்து வருவது துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு இடங்களில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் களத்தில் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 14) தோடாவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில், ராணுவ கேப்டன் தீபக் சிங் வீரமரணம் அடைந்தார். அந்த இடத்தில் இருந்து நான்கு ரத்தம் தோய்ந்த ரக்சாக்குகளை அதிகாரிகள் மீட்டனர், சம்பவ இடத்தில் எம்-4 கார்பைன்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஜம்மு காஷ்மீரின் அஸார் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 48 ராஷ்டிரிய ரைபிள் படைப் பிரிவின் ராணுவ கேப்டன் தீபக் சிங் வீரமரணம் அடைந்தார். அப்பகுதியில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; எலோன் மஸ்க்கின் ‘எக்ஸ்’ தளம் இந்தியாவில் செயலிழப்பு..!! என்ன காரணம்?