"ஜல்லிக்கட்டு காளைக்கு கட்டாயப்படுத்தி உயிருள்ள சேவலை சாப்பிட வைத்த நிகழ்வு.." விலங்கு நல ஆர்வலர்கள் கொந்தளிப்பு.!
ஜல்லிக்கட்டு காளையை கட்டாயப்படுத்தி உயிரோடு இருக்கும் சேவலை சாப்பிட வைத்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 2.48 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ராஜு என்பவரின் யூடியூப் சேனலில் வெளியானதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பான புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் .
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு பல இடங்களிலும் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளையை கட்டாயப்படுத்தி மாமிசம் சாப்பிட வைத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது . இது தொடர்பாக ரகு என்பவரது சமூக வலைதள பக்கத்தில் 2.48 நிமிடங்கள் கொண்ட காணொளி ஒன்று பகிரப்பட்டிருந்தது.
அந்த காணொளியில் மூன்று பேர் காலையை பிடித்திருக்க ஒருவர் அதன் வாயில் மாமிசம் மற்றும் உயிரோடு இருக்கும் சேவலை திணித்து அதனை சாப்பிடுமாறு காளையை துன்புறுத்துவது பதிவாகி இருக்கிறது. மேலும் சைவ புராணியான காளையை மாமிசம் சாப்பிட கட்டாயப்படுத்தி துன்புறுத்தியது பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கால்நடைகள் நல ஆர்வலரும் கால்நடைகளின் நலனுக்கான இந்திய மக்கள் என்ற அமைப்பின் நிறுவனருமான அருண் பிரசன்னா என்பவர் சேலம் மாவட்ட காவல் துறையில் புகார் கொடுத்து இருக்கிறார்.
இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக என் டி டி வி செய்தியாளர்களிடம் தெரிவித்த காவல்துறையினர்" இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர் . மேலும் விரைவிலேயே குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை உறுதியளித்திருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் " காளையை மாமிசம் மற்றும் உயிரோடு இருக்கும் சேவலை சாப்பிட செய்வதன் மூலம் காளையின் திறனை மேம்படுத்தி ஜல்லிக்கட்டு போட்டியில் அதனை வெற்றி பெற செய்வதற்காக இவ்வாறு கொடூரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்" என தெரிவித்துள்ளனர். வெற்றி பெற்ற காளைகளுக்கு வழங்கப்படும் பரிசுகளை பெறுவதற்காக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அருண் பிரசன்னா " இது காளை மற்றும் சேவலுக்கு இழைக்கப்பட்டுள்ள உச்சபட்ச கொடுமை என தெரிவித்திருக்கிறார். மேலும் சைவ பிராணியான காளையை அசைவ உணவுகளை சாப்பிட கட்டாயப்படுத்துவது நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு கொடூரமான செயல் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த காலை ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றால் இதே போன்ற செயல்முறைகளை பலரும் பயன்படுத்த தொடங்கி விடுவார்கள் என்ற அச்சம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.