ஜல்கான் ரயில் விபத்து : பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு.. 15 பேர் நிலை கவலைக்கிடம்..!!
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் - பரந்தா ரயில் நிலையம் அருகே இன்று கோர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் சென்றுகொண்டிருந்த புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுவிட்டதாக தகவல்கள் பரவி உள்ளது. இதனால், புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலின் அபாய சங்கிலியை இழுந்து ரயிலை நிறுத்தி, பயணிகள் அதில் இருந்து அவசர அவசரமாக குதித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மற்றொரு தண்டவாளத்தில் எதிர்புறத்தில் சென்றுகொண்டிருந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி பல பயணிகள் உயிரிழந்தனர்.
13 பேர் உயிரிழந்ததை ஜல்கான் எஸ்பி உறுதி செய்துள்ளார். காயமடைந்த 15 பேர் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிறப்பு காவல் கண்காணிப்பாளர் தத்தாத்ரயா கராலே பிடிஐக்கு தெரிவித்தார். இதுகுறித்து மத்திய ரயில்வே சிபிஆர்ஓ ஸ்வப்னில் நிலா கூறுகையில், சம்பவம் நடந்த இடம் மும்பையில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அடையாளம் காணப்பட்ட 7 பேரில் 3 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்களின் உடல் அடையாளம் காணமுடியாத வகையில் சிதைத்துள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, புஷ்பக் எக்ஸ்பிரஸின் பெட்டிக்குள் பிரேக்-பைண்டிங் காரணமாக தீப்பொறிகள் எழுந்துள்ளது, இதனால் பயணிகள் பயந்து கீழே குதிக்க முயன்றுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 மற்றும் எளிய காயங்களுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டிருந்தார். அந்த பதிவில்,"மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் ரயில் தண்டவாளத்தில் நடந்த சோகமான விபத்தால் வேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்" என்று பிரதமர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ரயில்வே வாரியத் தலைவர் மற்றும் பிற அதிகாரிகளிடம் இந்த சம்பவம் குறித்து முழுமையான தகவல்களைப் பெற்று, காயமடைந்த அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Read more ; ஷாக்!. வீரேந்திர சேவாக் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து?. அடுத்தடுத்து வெளிவரும் தகவல்!.