100க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் தண்டனை பெற்ற 'ஜலேபி பாபா' சிறையில் மரணம்!
ஹிசார் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த ஜலேபி பாபா என்ற அமர்புரி சிறையில் உயிரிழந்தார். போதை கலந்த டீயை கொடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளுக்கு முன்பு தோஹானாவில் ஜிலேபி விற்பனையாளராகப் பணிபுரிந்த அவர், பின்னர் 'பாபா'வாகி ஆசிரமம் கட்டினார். அக்டோபர் 2017 இல், தோஹானாவில் அமைந்துள்ள 'ஜலேபி பாபாவின் ஆசிரமத்தில் பெண் பக்தர்களின் ஆட்சேபகரமான வீடியோக்கள் வெளிவந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
போதை கலந்த டீயை கொடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்தது பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து விசாரணை நடத்தியபோது, குற்றம் நிரூபிக்கப்பட்டது. நூறுக்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்ததற்காக ஜனவரி 10, 2023 அன்று ஃபதேஹாபாத் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அதனைத்தொடர்ந்து அவர் ஹிசாரில் உள்ள மத்திய சிறை -2ல் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சிறையில் உள்ள 'ஜலேபி பாபா'வுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவர் முதலில் சிறையில் இருந்து ஹிசார் மாவட்ட சிவில் மருத்துவமனைக்கும் பின்னர் அக்ரோஹா மருத்துவக் கல்லூரிக்கும் பரிந்துரைக்கப்பட்டார். மாலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். 'ஜலேபி பாபா' இரவு நேரத்தில் சிறையில் இருந்தபோது மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.