’ஜக்கம்மா மாயம்மா’..!! ’அருந்ததி’ படத்தில் மிரட்டிய பேய் பங்களா..? எங்கு இருக்கு தெரியுமா..?
நடிகை அனுஷ்கா நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த அருந்ததி திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியிடப்பட்டது. இப்படத்தை கொடி இராமக்கிருஷ்ணா இயக்கினார். இந்த படத்தில், மனோரமா, சோனு சூட், சாயாஜி ஷிண்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் அதிக வசூல் செய்த இரண்டாவது தெலுங்குத் திரைப்படம் என்னும் சாதனையை படைத்தது. தெலுங்கில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் இதே பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் வரும் பேய் பங்களா பார்ப்பவர்களை பயமுறுத்தும் வகையில் இருக்கும். இந்த பங்களா உண்மையில் ஒரு சுற்றுலாத்தலம் ஆகும். ஆந்திர மாநிலத்தில் உள்ள பனகனப்பள்ளி அரண்மனை தான் இது. பனகனப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 4.25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பிஜப்பூர் சுல்தான் இஸ்மாயில் அடில் ஷா இந்த பனகனப்பள்ளி கோட்டையை 1601ஆம் ஆண்டு ராஜா நந்த சக்கரவர்த்தியிடம் இருந்து கைப்பற்றினார்.
கோட்டையுடன், சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களும் சுல்தானால் போற்றப்பட்ட தளபதி சித்து சும்பலின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவர் அவற்றை 1665ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பாதுகாத்து வந்தார். பின்னர், முஹம்மது பெக் கான்-இ ரோஸ்பஹானிக்கு இந்த பனகனப்பள்ளியைச் சுற்றியுள்ள பகுதி மரியாதையாக வழங்கப்பட்டது. தற்போது இந்த அரண்மனை ஆந்திராவில் பிரபலமான சுற்றுலாத்தளமாக விளங்கி வருகிறது.