’தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி’..!! ஆந்திர அரசியலை திருப்பிப் போட்ட அந்த கைது..!!
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். ஆட்சியில் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி மிக மோசமான தோல்வியைப் பதிவு செய்திருக்கிறார். இதற்கான காரணத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மக்களவைத் தேர்தலுடன் இம்முறை ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டசபைத் தேர்தல்களும் நடைபெற்றன. இதில் நமது அண்டை மாநிலமான ஆந்திராவுக்குக் கடந்த மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்பட்டன. இன்று லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில், அத்துடன் ஆந்திர சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இப்போது வரை அங்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரிய முன்னிலையைப் பெற்றுள்ளது.
மொத்தம் 127 தொகுதிகள் இருக்கும் நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெறும் 24 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. ஜெகன் மோகன் ரெட்டி இந்தளவுக்குப் படுதோல்வி அடைய சில காரணங்கள் இருக்கிறது. தலைநகர் அறிவிப்பதில் குழப்பம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை ஜெகன் மோகன் ரெட்டி எதிராகத் திரும்பியது. ஆனால், ஆந்திர அரசியலை மொத்தமாகப் புரட்டிப் போட்டது என்றால் அது சந்திரபாபு நாயுடு கைது தான். கடந்தாண்டு செப்டம்பரில் ஆந்திரப் பிரதேச திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.300 கோடி ஊழல் தொடர்பான வழக்கில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.
சுமார் 2 மாதங்கள் சிறையில் இருந்த அவர் அக்டோபர் மாதம் தான் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த ஒரு கைது தான் ஆந்திர அரசியலை மொத்தமாகப் புரட்டிப் போட்டது. இது குறித்து ஆக்சிஸ் மை இந்தியாவின் பிரதீப் குப்தா கூறுகையில், "கடந்த ஓராண்டிற்குள் நடந்த சம்பவங்கள் ஜெகனுக்கு எதிராக திரும்பி விட்டது. அதில் மிகப் பெரிய விஷயம் என்றால் அது சந்திரபாபு நாயுடு கைது தான். சமூக நலத் திட்டங்களை வழங்குவதன் மூலம் ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்குக் கிடைத்த நல்ல பெயர் எல்லாம் சந்திரபாபு நாயுடுவை கைது செய்த ஒரு தவறு காரணமாக இல்லாமல் போய்விட்டது" என்றார்.
சந்திரபாபு நாயுடு கைது இரண்டு விதமாகத் தாக்கத்தை ஏற்படுத்தியது. முதலில் அம்மாநில மக்கள் சந்திரபாபு நாயுடுவை போன்ற ஒரு பெரிய தலைவர் கைது செய்யப்படுவதை ஏற்கவில்லை. அவர்கள் இதனால் ஜெகன் மீது கோபமடைந்தனர். அதேபோல சிறையில் இருந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடு தனது பிளானை மாற்றினார். அதுவரை அங்குச் சிதறி இருந்த எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வந்தார். பவன் கல்யாணிடம் சந்திரபாபு நாயுடுவே சென்று பேசினார். ஜன சேனாவுடன் கூட்டணி உறுதியானது. அதேபோல பாஜகவையும் கூட்டணிக்குள் கொண்டு வந்தார்.
இதுவே ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு கை மேல் பலனைக் கொடுத்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவுக்கு ஓரளவுக்கு நல்ல ஆட்சியைக் கொடுத்திருந்தாலும், சந்திரபாபுவை கைது செய்த ஒரே நடவடிக்கையால் அவருக்கான முடிவுரையை அவரே தேடிக் கொண்டார் என்றே சொல்லலாம்.
Read More : 1.50 லட்சம் வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பிடித்த நோட்டா..!! எந்த தொகுதியில் தெரியுமா..?