Aadi 2024 : ஆடி முதல் நாள்.. கலசம் வைத்து அம்மனை வணங்குவது எப்படி?
தமிழ் மாதங்களில் மாதம் முழுவதிலும் திருவிழாவாக கொண்டாடப்படும் மாதம் என்றால் அது ஆடி மாதம் தான். அம்மன் கோவில்கள் மட்டுமின்றி, சிவன் கோவில், பெருமாள் கோவில் என அனைத்து கோவில்களிலும் இந்த மாதம் முழுவதும் விழாக் கோலம் பூண்டிருக்கும். அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில், முதல் நாள் கலசம் வைத்து அம்மனை வழிபட்டு அம்மனை வீட்டிற்கு அழைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
கலச வழிபாடு:
ஆடி மாதம் முதல் நாள் உங்கள் வீட்டின் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கோ அல்லது பிரசித்தி பெற்ற அம்மன் கோயிலுக்கோ சென்று வழிபடுவது சிறப்பு ஆகும். உங்கள் குலதெய்வம் எதுவாக இருந்தாலும் உங்கள் ஊரிலே உள்ள அம்மனே உங்களை பாதுகாப்பதால் உங்கள் ஊரில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று வழிபடுவது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
புதன்கிழமை ஆடி முதல் நாள் துவங்குவதால் அன்றைய தினம் அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து, பூஜைக்கு தயாராகலாம். பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களை சுத்தம் செய்து, பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும். முதலில் வாசல் தெளித்து கோலமிட்ட பிறகு, நிலை வாசலுக்கு சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். நிலைவாசலில் மாவிலையுடன் வேப்பிலை கலந்து தோரணம் கட்ட வேண்டும். பிறகு கலசம் வைத்து, அந்த கலசத்திற்கு குலதெய்வத்தையும் அம்பிகையையும் எழுந்தருள செய்து, வீட்டிற்கு அழைக்க வேண்டும். குலதெய்வம் எது என தெரியாதவர்கள் அன்னை காமாட்சியையே குலதெய்வமாக நினைத்து வீட்டிற்கு அழைத்து வழிபடலாம்.
கலசம் தயார் செய்வது எப்படி?
- கலசம் நிறுத்துவதற்காக ஒரு பித்தளை அல்லது செம்பு சொம்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அந்த சொம்பில் நல்ல தண்ணீரை நிரப்ப வேண்டும்.
- பின்னர், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து, பன்னீரையும் ஊற்ற வேண்டும்.
- இதையடுத்து, சொம்பில் ஒரு கைப்பிடியளவு வேப்பிலை இட வேண்டும்.
- பின்னர், அந்த தண்ணீரில் எலுமிச்சம்பழத்தை போட வேண்டும்.
- அந்த சொம்பில் மா இலை வைத்து தேங்காய் வைக்க வேண்டும்.
அம்மனை வீட்டிற்கு அழைக்க நல்ல நேரம் :
அம்மனை வீட்டிற்கு அழைத்து பூஜை செய்வதற்கான நல்ல நேரமாக காலை 6 முதல் 7 மணி வரையிலான நேரத்தையும், காலை 09.15 முதல் 11.45 வரையிலான நேரத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆடி முதல் நாளில் அம்மனுக்கு தலைவாழை போட்டு, படையல் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளவர்கள் பகல் 01.30 மணிக்கு மேல் படையல் இட்டு வழிபடலாம். அல்லது மாலை 6 மணிக்கு மேல் அம்மனை வீட்டிற்கு அழைத்து வழிபடலாம். தேய்காய் சுட்டு அம்மனுக்கு படைத்து வழிபடும் வழக்கம் உள்ளவர்களும் இந்த நேரத்தை பயன்படுத்தி தங்களின் வழிபாட்டினை துவங்கலாம்.
கலசம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. கலச வழிபாடு செய்ய முடியாதவர்கள் மனதார அம்மனை நினைத்து வழிபட்டால் போதும்.
Read more ; 33வது ஒலிம்பிக் திருவிழா!. பாரிஸில் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்ற தமிழர்!.