இன்று மகாளய அமாவாசை.. பித்ரு தோஷ பரிகாரம் எப்போதும் செய்ய வேண்டும்? முன்னோர்களை வழிபடுவது எப்படி?
ஒருவர் இறந்த பிறகு, அடுத்த வரும் அமாவாசையில் இருந்தே அவர்களை நினைத்து நாம் விரதம் இருந்து வழிபட துவங்கி விடலாம். மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்காக விளக்கேற்றி, அவர்களை நினைத்து தானம் கொடுப்பதன் மூலம் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு நற்கதி கிடைக்கிறது என்பது நம்பிக்கை. அவர்களுக்கு பிறவா நிலை என்னும் சொர்க்க பதவியும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
வருடம் முழுவதும் முன்னோர்களை வழிபட முடியாதவர்கள், வழிபட தவறியவர்கள், முன்னோர்களை வழிபட மறந்தவர்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது முன்னோர்களை நினைத்து, வழிபட வேண்டும் என உருவாக்கப்பட்டதே மகாளய பட்சம் காலமாகும். பட்சம் என்றால் 15 நாட்கள். புரட்டாசி மாதத்தில் வரும் பெளர்ணமிக்கு பிறகு வரும் 15 நாட்களும் முன்னோர்களை வழிபட ஏற்ற காலமாகும். இந்த 15 நாட்களும் முன்னோர்களை வழிபட தவறியவர்கள், 15 வது நாளில் வரும் மகாளய அமாவாசை அன்று மறக்காமல் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
திதி கொடுக்க உகந்த நேரம் : மகாளய அமாவாசை நாட்களில், ராகு மற்றும் எமகண்ட் நேரங்களை தவிர, காலை 6 மணி முதல், 1 மணி வரை தர்ப்பணம் கொடுக்கலாம். அதேபோல் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பனம் கொடுப்பது சிறப்பானது. இந்த நாட்களில், தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் அன்னதானம் செய்யலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் பித்ருக்களின் தோஷம் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. எனவே மகாளய அமாவாசை நாட்களில், முன்னோர்களுக்கு தர்ப்பனம் கொடுப்பது, அடுத்த தலைமுறையினருக்கும் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை என்பதால், பலரும் இதை கடைபிடிக்கின்றனர்.
முன்னோர்களை வழிபடுவது எப்படி? வீட்டு வாசல், பூஜை அறையில் கோலம் போடக்கூடாது. வெறுமனே தண்ணீர் தெளித்து விட்டால் போதுமானது. முன்னோர்களை வழிபட்டு படையல் இட வேண்டும். காகத்திற்கு கட்டாயம் சோறு வைக்க வேண்டும். அசைவ உணவுகளை எக்காரணம் கொண்டும் சமைக்க, உண்ணக்கூடாது. முன்னோர்கள் வீட்டுக்கு வரும் தினம். அவர்களை வரவேற்கும் வகையில் வீடு வாசல் சுத்தம் செய்ய வேண்டும். தலைமுடி, நகம் வெட்டக் கூடாது.
சாப்பிடுவதற்கு முன்னர் மூதாதையருக்கு பிடித்த உணவுகளை சமைத்து படைக்க வேண்டும். முன்னோர்களுக்கு உணவைப் படைக்கும் முன்பு, யாரும் சாப்பிடக் கூடாது. நாள் முழுவதும் விரதம் இருக்கலாம். அல்லது உணவு படைக்கும் வரை சாப்பிடாமல் இருந்து, விளக்கேற்றி, கற்பூர ஆராதானை செய்து பின்னர் சாப்பிடலாம். காகம் என்பது முன்னோர்களின் அம்சமாகக் கருதப்படுகிறது. எனவே வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடும் முன்பு, உணவை காகத்துக்கு படைக்க வேண்டும். சாதம், காய்கறி, குழம்பு ஆகியவற்றில் நெய் சேர்த்து காகத்துக்கு படைப்பது சிறப்பு. காகங்கள் அமாவாசை அன்று வைத்த உணவை சாப்பிட்டால், முன்னோர்கள் சாப்பிட வந்திருப்பதாக நம்பப்படுகிறது.
Read more ; ‘ரஜினி நலமுடன் உள்ளார்’ இன்னும் இரண்டு நாளில் டிஸ்சார்ஜ்..!! – அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை