குவைத் கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 53ஆக உயர்வு..!! இந்தியர்கள் எத்தனை பேர்..?
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 பேர் என்பதும், இதில் 41 பேர் இந்தியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்நிலையில், கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதனால், தீ கட்டிடம் முழுவதும் பரவி, புகை மண்டலமாக காட்சி அளித்தது.
தீயில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் பதற்றத்தில் கட்டிடத்தில் இருந்து வெளியே ஓடி வந்தனர். தொழிலாளர்கள் பலர் தப்பிய நிலையில், அறைகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்கள், படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். சிலர் தப்பிப்பதற்காக முயற்சிக்கும் போது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''இந்த கட்டிடத்தில் தனியார் கட்டுமான நிறுவன ஊழியர்கள் பலர் தங்கியிருந்தனர்.
தீயணைப்பு படையினர் உதவியுடன் 10-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக புகையை சுவாசித்ததில் பலர் உயிர் இழந்தனர்” என்றனர். உயிரிழந்தவர்களில் 41 இந்தியர்கள். கேரளாவை சேர்ந்த 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளா, தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த 200 பேர் இதில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Read More : குவைத் தீவிபத்து!… முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!… தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்!