தீபாவளிக்கு 4 நாட்கள் லீவு.. முன்கூட்டியே சம்பளம்..!! பண்டிகைய கொண்டாடுங்களே..
அக்டோபர் 31 ஆம் தேதி வியாழன் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ளது. இந்த ஆண்டு வியாழன் கிழமை தீபாவளிப் பண்டிகை வருவதால் ஒரு நாள் மட்டுமே விடுமுறை கிடைக்கும் நிலை உள்ளது. இதனால் வெளியூர்களில் தங்கியிருப்பவர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவதில் மந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே தீபாவளிக்கு அடுத்த வெள்ளிக் கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்த வரை தீபாவளி பண்டிகை அன்று மட்டும் தான் அரசு விடுமுறை. தீபாவளிக்கு மறுநாள் பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை அறிவித்து வருகிறது. இந்நிலையில் நவம்பர் 1-ந் தேதி விடுமுறை அறிவிக்க தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அமிர்தகுமார், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். இந்த நிலையில், தீபாவளி மறுநாள் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அப்படி விடுமுறை கொடுத்தால் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். மேலும் இது குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கும் பட்சத்தில் அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 28, 29, 30 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிரெடிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.