அயோத்தி: "விண்வெளியில் ராமர் கோவில் தோற்றம்.." இந்திய செயற்கைக்கோள் வெளியிட்ட முதல் படம்.!
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் கீழ் இயங்கும் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் செயற்கைக்கோள்களின் மூலம் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட ராமர் கோவிலின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இந்தப் புகைப்படங்களை இஸ்ரோ பகிர்ந்திருக்கிறது.
உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் நூற்றாண்டு கனவான ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் குழந்தைப் பருவ ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யும் விழா நாளை கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இதற்கான விழா ஏற்பாடுகள் மற்றும் சடங்குகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் செயற்கை கோள்களின் மூலம் எடுக்கப்பட்ட ராமர் கோவிலின் பிரம்மாண்டமான தோற்றத்தை ஐதராபாத்தை தளமாகக் கொண்ட இஸ்ரோவின் National Remote Sensing Centre (NRSC) வெளியிட்டுள்ளது.
250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரத்தில் மூன்று அடுக்குகளைக் கொண்டதாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலின் ஒவ்வொரு அடுக்குகளும் 20 அடி உயரம் கொண்டதாக அமைந்திருக்கிறது. 392 தூண்களும் 44 வாயில்களும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தின் பிரம்மாண்டமான காட்சியை இந்திய செயற்கைக்கோள் படம் பிடித்து வெளியிட்டுள்ளது. ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும் தெரிவித்திருக்கிறது.
முதன் முதலாக எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் கடந்த வருடம் டிசம்பர் 16ஆம் தேதி எடுக்கப்பட்டவை என இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. இந்தப் புகைப்படத்தில் ராமர் கோவிலின் முழுமையான தோற்றம் புதிதாக மறுசீரமைக்க பட்டிருக்கும் தசரதர் மஹால் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. இவை தவிர அயோத்தியின் புதிய ரயில் நிலையமும் இந்த செயற்கைக்கோள் புகைப்படங்களில் இடம் பெற்றுள்ளது. இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.