சூரிய வெடிப்பை படம் பிடித்த ஆதித்யா எல்-1 : இந்திய செயற்கைக் கோள்களுக்கு பாதிப்பா? ISRO சொன்ன புதிய தகவல்!
சூரிய வெடிப்பை ஆதித்யா எல்-1 விண்கலம் படம் பிடித்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்ய, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. சூரியனின் வெளிப்புற பகுதிகள் பற்றிய ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம், கடந்த 11-ம் தேதியன்று ஏற்பட்ட சூரிய வெடிப்பின் பல்வேறு பகுதிகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த 2003 ஆம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட சூரிய புயலின் காரணமாக வழிகாட்டு அமைப்பான ஜி.பி.எஸ் சேவை மற்றும் பல செயற்கைக்கோள் சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் மீண்டும் தற்போது இந்த பகுதியில் சூரிய புயல் ஏற்பட்டிருக்கிறது.
மே 10 மற்றும் 11-ம் தேதிகளில் சூரிய ஒளியின் தீவிரம் அதிகமாக இருந்தபோதிலும், புவிசார் சுற்றுப்பாதையில் உள்ள இஸ்ரோவின் 30 விண்கலங்களின் செயல்பாடுகள் ஏதும் பாதிக்கப்படவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தால் (IMD) பயன்படுத்தப்படும் இன்சாட்-3DS மற்றும் இன்சாட்-3DR இன் ஸ்டார் சென்சார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இருப்பினும், குறைந்த புவி சுற்றுப்பாதையில் (LEO) சுற்றி வரும் அதன் சில செயற்கைக் கோள்கள் சில சிக்கல்களை சந்தித்தன, இது போன்ற அதிக சூரிய நிகழ்வுகள் காரணமாக பூமியின் வளிமண்டலத்தின் அதிகப்படியான வெப்பத்தால் வெளிப்படும் ஒரு நிகழ்வு.
153 கிலோ எடையுள்ள EOS-07 செயற்கைக்கோள் (430 கிமீ உயரத்தில்) மே 10 மற்றும் மே 11 ஆகிய தேதிகளில் முறையே 300 மீட்டர் மற்றும் 600 மீட்டர் சுற்றுப்பாதை சிதைவை சந்தித்தது. 688 கிலோ எடையுள்ள கார்டோசாட்-எஃப், அதிக சூரிய செயல்பாட்டின் இந்த காலகட்டத்தில் 35 - 40 மீட்டர் இயல்பான சுற்றுப் பாதையில் 180 மீட்டர் வரை சிதைந்தது.
மே 11 அன்று குறைந்தது 9 லியோ செயற்கைக் கோள்கள் சுற்றுப்பாதையில் சிதைவை சந்தித்ததாக ISRO தரவு தெரிவித்துள்ளது. கார்டோசாட்-2கள், ரிசாட்-2பி தொடர்கள், கார்டோசாட்-2பி, எக்ஸ்01, ஆர்2ஏ மற்றும் மைக்ரோ-2பி ஆகியவை இதில் அடங்கும், இவற்றின் சுற்றுப்பாதை சிதைவு இயல்பிலிருந்து 50 -600 மீட்டர் வரை இருந்தது. மே 11 அன்று இயல்பை விட அனைத்து செயற்கைக் கோள்களும் சுற்றுப்பாதை சிக்கல் ஏற்பட்டு 5 முதல் 6 மடங்கு அதிகரித்திருந்தது" என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.