இஸ்ரேல் ராணுவம் அடாவடி!… எங்கு இருந்தாலும் ஹமாஸ் மீது தாக்குதல் நடத்தப்படும்!
காசாவில் ஹமாஸ் அமைப்பினர் எங்கு இருந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நடத்தி வரும் போரால் பாலஸ்தீன பகுதியான காசா நிலைகுலைந்துள்ளது. கடந்த 43 நாள்களாக நடந்து வரும் போர், உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தாக்குதலை பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தொடங்கியிருந்தாலும், தற்காத்து கொள்கிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் அப்பட்டமான போர் விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் இதுவரை, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 4,650 குழந்தைகளும் 3,145 பெண்களும் அடங்குவர். மருத்துவமனை, அகதிகள் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் மனிதத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மேலும், போர் தீவிரமடைந்து வரும் நிலையில் காசாவில் உள்ள முக்கிய மருத்துவமனைகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எங்கு இருந்தாலும் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. காசா முனையில் உள்ள கான்யூனிஸ் நகரில் இருந்து மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. எங்கள் ராணுவ நடவடிக்கையை மேலும் முன்னெடுத்து செல்வதில் உறுதியாக உள்ளோம். தெற்கு காசா பகுதி உள்பட ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எங்கு இருந்தாலும் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.