பெய்ரூட்டை குறிவைத்த இஸ்ரேல்!. அடுத்தடுத்து 12 முறை தாக்குதல்!. 22 பேர் பலி!
Israel Attack: லெபனானில் பெய்ரூட்டை குறிவைத்த இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 22 பேர் உயிரிழந்தனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதில், காசாவில் 44,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மற்றொரு மேற்காசிய நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளின் முக்கிய தளபதிகளை சுட்டுக் கொன்றது.
இந்நிலையில், லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் தாக்குதல் நடத்தப் போவதாகவும், இதனால் பொதுமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் 12 முறை தாக்குதல் நடத்தப்பட்டதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து என்.என்.ஏ., வெளியிட்டுள்ள செய்தியில், '12 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஷியா, ஹடாத் மற்றும் ஹரத் ஹெய்க் உள்ளிட்ட மாவட்டங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர். ' என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் தற்போது வரையில் 3,583 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, லெபனானின் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.