ஈரான் மீது சைபர் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. திருட்டு போன முக்கிய ரகசியங்கள்..!! - மத்திய கிழக்கில் பதற்றம்
இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் மிகப் பெரிய சைபர் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. இதனால் ஈரான் நாட்டின் அணுசக்தி நிலையம் தொடங்கிப் பல முக்கிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த வாரம் ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் பெரியளவில் பாதிப்பு இல்லை. இருப்பினும், இதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் என்று இஸ்ரேல் கூறியிருந்த நிலையில், இப்போது ஈரான் மீது சைபர் தாக்குதல் நடந்துள்ளது. இந்த இணைய தாக்குதல்களால் ஈரான் அரசின் மூன்று துறைகள் முடங்கியுப்போயுள்ளது. குறிப்பாக அணுசக்தி நிலையங்களுக்கும் இந்த சைபர் தாக்குதல் மூலம் குறி வைக்கப்பட்டுள்ளது.
ஈரானை மொத்தமாக முடக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பெரிய சைபர் தாக்குதல் நடந்ததாகத் தெரிகிறது. இது எந்தளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறித்த தெளிவான தகவல்கள் இப்போது வரை வெளியாகவில்லை. இருப்பினும், முதற்கட்ட தகவல்களை வைத்துப் பார்க்கும் போது பாதிப்புகள் மோசமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஈரானின் உச்ச கவுன்சில் ஆஃப் சைபர்ஸ்பேஸின் முன்னாள் செயலாளர் ஃபிரூசாபாடி கூறுகையில், "ஈரான் அரசின் மூன்று முக்கிய அமைப்புகளான நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிர்வாகம் என்று மூன்றுமே மிக மோசமான சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பல முக்கிய தகவல்களும் திருடப்பட்டுள்ளன
குறிப்பாக எங்கள் அணுசக்தி மையங்களைக் குறிவைத்தும் தாக்குதல் நடந்துள்ளது. எரிபொருள் விநியோக உள்கட்டமைப்பு, நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து நெட்வொர்க், துறைமுகங்கள் எனப் பலவற்றைக் குறிவைத்துத் தாக்குதல் நடந்துள்ளன. சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட சில துறைகள் பற்றி மட்டுமே நான் சொல்கிறேன். இன்னும் பல அமைப்புகள் மீதும் சைபர் தாக்குதல் நடந்துள்ளது" என்றார்.
Read more ; கனமழை எச்சரிக்கை : மழை அப்டேட்களை உடனே பெற செல்போன் செயலி அறிமுகம்..!!