பர்தா அணியவில்லை என்பதால் விவாகரத்து..! "இது அவருடைய உரிமை" கணவருக்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!!
அலகாபாத் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றின் விசாரணை மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
பர்தா அணியவில்லை என்பதற்காக ஒருவர் தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். இதை மன ரீதியிலான கொடுமை என்று கூறி வழக்கு தொடுத்தார். இதை எல்லாம் மனக் கொடுமையின் அடிப்படையில் சேர்க்க முடியாது.. இது எல்லாம் விவாகரத்து பெறுவதற்கு தகுதியுடையதாக இருக்காது என்று அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் சௌமித்ரா தயாள் சிங் மற்றும் டோனாடி ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. பர்தா அணியவில்லை என்பது எனக்கு மன ரீதியாக ஏற்பட்ட கொடுமை என்று கணவர் ஏற்கனவே கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். கணவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க நீதிபதிகள், ”நீங்கள் உங்கள் மனைவியை பொருள் போல பார்க்கிறீர்கள். கேட்டால் சுதந்திரம் கொடுக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள்.
சந்தை மற்றும் பிற இடங்களுக்குத் தானாகச் செல்வார் என்ற வாதத்தை வைக்கிறீர்கள். இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. பர்தா அணிய சொல்லிவிட்டு, சுதந்திரமும் கொடுக்கிறேன் என்று எப்படி வாதம் வைக்கிறீர்கள்..? மனைவியின் சுதந்திரம் என்பது அவர் சம்பந்தப்பட்டது. ஒரு சிவில் சமூகத்தில் அரசு கொடுத்திருக்கும் சுதந்திரம் எல்லாம் எல்லோருக்கும் உள்ளது. அது பெண்களுக்கும் உள்ளது. இப்படி இருக்க நீங்கள் பர்தா அணிய சொல்லி கட்டாயப்படுத்துவதே தவறு.
அதோடு இல்லாமல் அதை காரணம் கட்டி விவாகரத்து வேறு கேட்டுள்ளீர்கள். ஒரு பெண் உடை அவரின் சொந்த விருப்பம். ஒரு சிவில் சமூகத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவர் உடை அணிந்து கொள்ளலாம். அப்படிதான் ஆணும். ஆனால், அதையெல்லாம் காரணம் காட்டி விவாகரத்து கேட்க முடியாது. இந்த மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.