அமைச்சர் செய்யுற வேலையா இது?... சர்ச்சையில் சிக்கிய ரோஜா!… களப்பணியில் மழையில் நனைந்தபடி நடனம்… வைரலாகும் வீடியோ!
திருப்பதி, புயல் மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் நடிகையும், ஆந்திராவின் சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா, குடையை வைத்தபடி மழையில் நடனமாடியபடி ரசித்தார். இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலத்தில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது. இந்த புயல் 10 மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
நடிகையும், ஆந்திராவின் சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜாவும் களப்பணியில் ஈடுபட்டுள்ளார். புத்தூர் பேரூராட்சி பிள்ளாரிப்பட்டு அலுவலகம் தா்மாம்பா புரத்தில் கனமழை பெய்தது. அப்போது ரோஜா குடையை வைத்தபடி மழையில் நடனமாடியபடி ரசித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. புயல் மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் அமைச்சர் ஒருவர் மழையில் நனைந்தபடி நடனம் ஆடியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது பற்றி தெலுங்கு தேசம் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த காலங்களில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார். அப்போது புயல் போன்ற இயற்கை பேரிடர் சமயத்தில் அமைச்சர்கள் அனைவரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தோம். ஆனால் ரோஜா மழையை ரசித்து நடனம் ஆடுகிறார் என சாடியிருக்கிறது. இதையடுத்து ரோஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.