ரேஷன் அரிசியை இப்படி விற்பனை செய்றீங்களா..? இனி சிக்கினால் குடும்ப அட்டை ரத்து..!!
தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கார்டு வைத்துள்ள பொதுமக்களிடம் இருந்து, ரேஷன் அரிசியை வாங்கி, அவற்றை கேரளாவுக்கு கடத்தும் செயல் அதிகரித்துள்ளது. இன்னும் சிலர் ரேஷன் அரிசியாக கடத்துவதற்கு பதில், அதனை அரிசி ஆலைகளுக்கு அனுப்பி பாலிஷ் செய்து, அந்தந்த அரிசி ஆலைகளின் பெயரிலேயே கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
மேலும் சிலர், ரேஷன் அரிசியை மாவாக அரைத்து, அரை கிலோ, ஒரு கிலோ பாக்கெட்டுகளாக பிரபல நிறுவனங்களின் பெயரில் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் பகுதிக்கு உட்பட்ட இனாம் மணியாச்சி ஊராட்சி அத்தைகொண்டான் பகுதியில், ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சோதனை செய்தபோது, தலா 50 கிலோ எடை கொண்ட 13 மூட்டை ரேஷன் அரிசி மாவும், தலா 50 கிலோ எடை கொண்ட 3 மூட்டை ரேஷன் அரிசியும் அங்கு இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இவற்றை பதுக்கி வைத்து இருந்த ராமமூர்த்தி (52), முருகன் (46) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். எனினும், மீண்டும் இதுபோன்றே புகார்கள் தொடர்ந்து காவல்துறைக்கு வந்தது. இதையடுத்துதான், ரேஷன் அரிசியை விற்பனை செய்பவர்களின் குடும்ப அட்டை பறிமுதல் செய்யப்படும் என்று தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, எஸ்பி கூறுகையில், ”ரேஷன் கடைகளில் இருந்து பொதுமக்கள் ரேஷன் அரிசியை வாங்கி, அதைவீட்டில் பதுக்கி வைத்து ரேஷன் அரிசி கடத்தும் நபர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். எனவே, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களிடம் விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குடும்ப அட்டை பறிமுதல் செய்யப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Read More : காட்டுக்குள் பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடி..!! காதலனை தாக்கிவிட்டு 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்..!!