திமுக அரசிற்கு புத்தி இல்லையா.? நடப்பது மக்களாட்சியா.? இல்லை போலீஸ் ஆட்சியா.?திருமுருகன் காந்தி ஆவேச பேட்டி.!
விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டு இருக்கும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்து ஆக்ரோஷமான பேட்டி கொடுத்திருக்கிறார். அவரது பேட்டியில் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது போராட்டம் செய்யும் விவசாயிகளை பிரித்து வெவ்வேறு சிறைச்சாலைகளில் அடைப்பது பாசிஸ்ட் நடவடிக்கை என தெரிவித்திருக்கிறார். காவல்துறையினர் எதைச் செய்தாலும் அதற்கு எதிராக எந்த கேள்வியும் கேட்காமல் அமைச்சர்கள் கையெழுத்து போட்டு அனுமதி கொடுப்பார்களா.? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தமிழகத்தில் நடைபெறுவது மக்களாட்சியா.? இல்லை போலீஸ் ஆட்சியா.? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் தொடர்ந்து பேசுகையில் இங்கு கைது செய்யப்பட்டு இருக்கும் விவசாயிகளை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு என்ன பயன்.? நான் கைது செய்யப்பட்ட போதும் என்னை வேலூர் சிறையில் கொண்டு அடைத்தார்கள். என்னுடைய குடும்பத்தார் என்னை பார்க்க விடாதபடி தனிமை சிறையில் அடைத்து கொடுமை படுத்தினார்கள்.
என் போன்று மக்கள் நலனுக்காக போராடுபவர்களை அரசு அதிகாரங்களைக் கொண்டு ஒதுக்கி விட முடியாது. என் மீது 55 வழக்குகள் இருக்கிறது. என்னை அரசாங்கத்தால் தடுத்து நிறுத்த முடிந்ததா.? தொடர்ந்து மக்களுக்காக போராடி வருகிறேன். என் போன்று மக்களுக்காக போராடுபவர்களை எந்த அடக்குமுறைகளும் தடுத்து நிறுத்த முடியாது என ஆக்ரோஷத்துடன் பேட்டியளித்தார் திருமுருகன் காந்தி.