மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு தடையா..? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அக்கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி, அண்ணாவின் பிறந்தநாளில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை கொடுக்கும் திட்டத்திற்கு எதிராக கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழ்நாடு அரசு கடனில் உள்ளது. இந்த சூழலில் இதுபோன்ற திட்டங்கள் கொண்டு வருவது மேலும் கடன் சுமையை அதிகரிக்கும். இதனால், இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
அதனை தொடர்ந்து, அந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.