தோனியுடன் முடிந்துவிட்டதா உலகக்கோப்பை கனவு?… இந்திய ரசிகர்கள் குமுறல்!… கண்ணீர் விட்டு அழுத இந்திய வீரர்கள்!
2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றிபெற்றது. இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியதால், இந்திய வீரர்கள், ரசிகர்கள் என தேசமே கண் கலங்கியது.
உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது. ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு பறிபோனது.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்ற நிலையில் இந்திய வீரர்கள் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதனர். முகமது சிராஜ், விராட் கோலி, ரோகித் சர்மா உள்பட இந்திய வீரர்கள் பலரும் அழுத நிகழ்வு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ரசிகர்கள் தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்திய அணியின் தங்க மகன் தோனி இல்லாமல் இந்தியா இனி உலக கோப்பையே வெல்லாதா என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் தோனி தான் கடைசியாக உலகக்கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியாவுக்கு வென்று தந்ததாகவும், அதன் பிறகு இந்தியா பலமுறை இறுதி போட்டிக்கு சென்றும் ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்ல முடிய வில்லை என்றும் இனி தோனியே பிறந்து வந்தால் தான் இந்தியாவுக்கு ஐசிசி கோப்பை கிடைக்குமா என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் புலம்பி வருகின்றனர்.