தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படுகிறதா..? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!
தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ரேஷன் கடைகளில் மதுவிற்பனையை அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐடி ஊழியர் முரளிதன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ”கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். சூப்பர் மார்க்கெட் மற்றும் ரேஷன் கடைகள் மூலம் மது விற்பனைக்கு அனுமதி தர வேண்டும். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்தோர் டாஸ்மாக்கிற்கு மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனம் நடத்துகின்றனர். டாஸ்மாக் நிர்வாகம் சில குறிப்பிட்ட மதுபானங்களை மட்டுமே விற்கிறது.
எனவே, மதுபானங்களை நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார். தமிழ்நாட்டில் விற்கப்படும் மதுபானங்களின் தரத்தை விட, வெளிமாநிலங்களில் மதுபானங்களின் தரம் அதிகமாக உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாகவும் டாஸ்மாக்கில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் ஜூலை 29ஆம் தேதி தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.