கொரோனா போல் உருவெடுக்கிறதா சீனாவில் பரவும் சுவாச நோய் பாதிப்பு..!! எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்..!!
சீனாவை ஆட்டிப்படைக்கும் சுவாசம் சார்ந்த பாதிப்புகள், மற்றுமொரு கொரோனா பாதிப்பாக உருவெடுக்குமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
சீனாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சுவாச நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான மருத்துவ ஆய்வில் குழந்தைகளிடம் மைக்கோபிளாஸ்மா கண்டறியப்பட்டது. இதற்கு அப்பால் புதிய அல்லது அசாதாரண வைரஸ்கள் எதையும் அறிய முடியவில்லை. இது கொரோனா போன்ற தொற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை” என எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவிக்கும் அளவுக்கு, சீனாவில் நிமோனியா நோயால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், குழந்தைகளின் சுவாச நோய்கள் மற்றும் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பு குறித்து விரிவான அறிக்கையை அளிக்குமாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நிமோனியா பரவல் அபாயத்தைக் குறைக்க தடுப்பூசி பரிந்துரைக்கப்பட்டது.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் சுயமாக தங்களை, தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத்துடன் பரிசோதனை மற்றும் தேவைக்கேற்ப மருத்துவ சிகிச்சை பெறுதல், முகக்கவசம் அணிதல், நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்தல், அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட கொரோனா கால வழிமுறைகள் சீனாவுக்கு வழங்கப்பட்டன.
இதற்கிடையே, இந்தியா உட்பட அண்டை நாடுகள் பலவும் சீனாவின் சுகாதார அவசர நிலையை தீவிரமாக கவனித்து வருகின்றன. இந்த சூழலில், ”சீனாவின் தற்போதைய நிமோனியா பாதிப்புகள், முந்தைய கொரோனாவுக்கு நிகரானவை இல்லை” என எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவற்றின் பின்னணியில் குளிர்காலத்தில் அடையாளம் காணப்படும் சாதாரண வைரஸ்களே இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சீனாவில் கொரோனா காலத்து ஊரடங்கு என்பது மிகவும் கெடுபிடியாக இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் அது நீக்கப்பட்டது. பின்னர், வரும் முதல் குளிர்காலம் என்பதால் தற்போதைக்கு குழந்தைகள் எளிதில் தொற்றுக்கு ஆளாகிறார்கள். அவர்களின் உடல் போதிய எதிர்ப்பு சக்தி பெறும் வரை இந்த தொற்றுகள் அங்கே அதிகம் நிலவும்” என்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.