கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆ? 68 ஆ?... நீதிமன்றம் சரமாரி கேள்வி...!
அரிதினும் அரிதான வழக்கு என கருதி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து 70 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் தயாரித்து, விற்பனை செய்யப்படுவதாகவும், இதில் பலருக்கு தொடர்பு உள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதையடுத்து விஷசாராயம் மரணம் தொடர்பான வழக்கை காவல்துறை விசாரித்தால் நியாயமாக இருக்காது. அதனால் சி.பி..ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க., அ.தி.மு.க., பா.ஜ.க. வழக்கறிஞர்கள், இரு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர்.இந்த வழக்குகளை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. விசாரணையில் வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தற்பொழுது நீதிமன்ற உத்தரவுக்கான நகல் வெளியாகி உள்ளது. அதில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆ? 68 ஆ? அதிலும் குழப்பமா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எத்தனை முறை கைது செய்யப்பட்டாலும் தொடர்ந்து சாராயம் விற்று வந்த முக்கிய நபரான கண்ணுக்குட்டி எனும் கோவிந்தராஜின் நடவடிக்கைகளை தொடர்து கண்காணிக்காமல் போலீசார் கண்களை மூடிக்கொண்டு இருந்தது ஏன்? வேறு மாநிலங்களிலிருந்து போதை வஸ்துகள் கடத்திவரப்பட்டது குறித்து சிபிசிஐடி முறையாக விசாரிக்கவில்லை. கள்ளக்குறிச்சில் போலீசாருக்கு தெரிந்தே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினர் கள்ளச்சாராய விற்பனையை முளையிலேயே கிள்ளி இருந்தால், 67 பேரின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி. யார் இதற்கு பொறுப்பு ஏற்கப்போகிறார்கள்? முக்கிய குற்றவாளியான கன்னுக்குட்டி தொடர்ந்து தங்கு தடை இன்றி கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்ததிலிருந்து அவருக்கும், காவல்துறையினருக்கும் தொடர்பு உள்ளது என்பதை நம்ப வேண்டியுள்ளது. தமிழக அரசுக்கு 13.12.2023-ல் டிஜிபி எழுதிய கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், 67 பேரது உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என நீதிமன்றம் கூறி உள்ளது.