பால் கறக்கும் இயந்திரம் பாதுகாப்பானதா?… மாட்டின் மடியை பாதிக்க வாய்ப்பு!
மாடுகளின் மடியில் கைகளால் பால் கறப்பதை நம்மூர் பால்பொருள் தயாரிப்புத் தொழிலாளர்கள் காலாகாலமாகச் செய்து வருகின்றனர். பசு மற்றும் எருமை மாட்டின் மடியில் பால் கறப்பதே தனித் திறமை. நன்றாகப் பழகிய மாடு எஜமானரை மட்டுமே மடியில் பால் கறக்க அனுமதிக்கும். மாட்டின் மடியில் தண்ணீர் தெளித்து, நன்றாக சுத்தம் செய்த கைகளைக் கொண்டு மடியை லாவாகமாக பால் கறக்கும் பால்காரர்கள் அதில் இருந்து ஆடையைப் பிரித்து எடுத்து, பின்னர் பாலை விற்பனைக்கு அனுப்புவர். பால் கறக்க வசதியாக சிலர் கைகளில் சிறிதளவு எண்ணெய் தடவிக்கொள்வர்.
இதனால் மாட்டின் காம்புகளில் எரிச்சல், அரிப்பு உண்டாகாது. மேலை நாடுகளில் பால் கறக்க 50 ஆண்டுகளுக்கு முன்னரே இயந்திரம் கண்டிபிடிக்கப் பட்டுவிட்டது. மாட்டின் மடியில் கைகள் படும்போது பால்காரரின் கைகளில் படிந்துள்ள கெட்ட பாக்டீரியாத் தொற்று மாட்டின் சருமத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. மாட்டின் உடலில் உள்ள பாக்டீரியாக்கள் மனிதர்களுக்கு ஒவ்வாமை ஏற்படத்தலாம். பால் கறக்கும் இயந்திரத்தில் பால் கறக்கும்போது மாட்டின் சரும பாதிப்பு தடுக்கப்படுகிறது.
பல்சேட்டர், டீட் கப் ஷெல்ஸ் மற்றும் லைனர்கள், பால் ரிசப்டகிள், வாக்குவம் பம்ப் மற்றும் கேஜ், வாக்குவம் டாங்க், ரெகுலேட்டர் உள்ளிட்ட பல பாகங்களைக் கொண்டுள்ள பால் கறக்கும் இயந்திரம், மின்சாரம், பேட்டரி இரண்டிலும் வேலை செய்யும். மாட்டின் மடியை மிருதுவாக, அதே சமயம் உறுதியாகப் பிடித்து இழுத்தால்தான் பால் வாளியில் பீச்சியடித்து படிப்படியாக நிரம்பும். இதற்கு மிருதுவான ரப்பர்கள் லைனர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மனிதர்கள் விரல்களால் பால் கரப்பதைக் காட்டிலும் பன்மடங்கு வேகத்தில் நான்கு மடியையும் மாற்றி மாற்றி இழுத்து இயந்திரம் பால் கறந்துவிடும். இதனால் அதிக நேரம் மிச்சமாகும். பால் கறந்து முடித்ததும் சென்சார் மூலம் அதனை இயந்திரம் உணர்ந்துகொண்டு கறப்பதை நிறுத்திவிடும். ஆனால் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால் அது மாட்டின் மடியை பாதிக்க வாய்ப்புண்டு. எனவே அதனை சரிசெய்ய வேண்டியது அவசியம்.