நீங்க யூஸ் பண்ற பெருங்காயம் உண்மையானதா..? இல்ல போலியானதா..? இந்த ட்ரிக் மூலம் ஈஸியா கண்டுபிடிக்கலாம்..
இந்திய உணவுகளில் பல வகையான மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இந்திய மசாலாப் பொருட்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. இந்தியா உலகின் மிகப்பெரிய மசாலா உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியாளராகவும் உள்ளது.
நம்மில் பலரின் வீடுகளிலும் சமைக்கும் போது பல்வேறு வகையான மசாலாப் பொருட்களை சேர்த்து தான் சமைக்கிறோம். இந்த மசாலாக்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான பண்புகள் மற்றும் சுவை கொண்டவை.
அந்த வகையில் பெருங்காயம் என்பது இந்திய சமையலில் தவிர்க்க முடியாத ஒரு பொருள். இது Ferula Asafoetida என்ற தாவரத்தின் வேரில் இருந்து பெறப்படுகிறது. ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் ஈரான் போன்ற பிரதேசங்களில் இதன் செடி பெரும்பாலும் வளரும். பெரும்பாலான வீடுகளில் காய்கறிகள், பருப்பு வகைகள் அல்லது குழம்பு வகைகள் என பல உணவுகளில் பெருங்காயம் சேர்க்கப்படுகிறது. பெருங்காயம் உணவுக்கு வாசனையை கொடுப்பதுடன், செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
ஆனால் தற்போது சந்தையில் பல போலியான மசாலாப் பொருட்கள், உண்மையான மசாலாப் பொருட்களை போன்றே விற்கப்படுகின்றன. அதில் பெருங்காயத்திலும் கலப்படம் செய்யப்படுகிறது. இந்த போலி பெருங்காயத்தை உணவில் சேர்ப்பதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் அதே நேரம் உண்மை எது அல்லது போலி எது என்பதை வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை. சரி, சமையலுக்கு பயன்படுத்தும் பெருங்காயம் உண்மையானதா அல்லது போலியா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?
சந்தையில் பல பெயரில் பெருங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. சில பெருங்காயம் மிகவும் வலுவான அல்லது கடுமையான வாசனையைக் கொண்டிருப்பதை நாம் கவனித்திருப்போம்.. ஆனால் அதே நேரம், நீங்கள் பெருங்காயத்தை எவ்வளவு போட்டாலும் சுவையோ வாசனையோ வராது. ஆனால் நீங்கள் வீட்டிலேயே ஒரு எளிமையான வழிமுறை மூலம் கண்டறியலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
முதலில், நீங்கள் கொஞ்சம் பெருங்காயத்தை எடுத்து அதை நேரடியாக தீயில் வைத்து எரிக்க வேண்டும்.
அதனை எரிக்கும்போது ஏதேனும் பளபளப்பான பொருள் வெளியேறினால், உங்கள் பெருங்காயம் உண்மையானது என்று அர்த்தம்.
ஆனால் நீங்கள் பயன்படுத்துவது போலி பெருங்காயமாக இருந்தால் அதில் இருந்து எந்தப் பொருளும் வெளியேறாது.
இந்த எளிய வழி மூலம் நீங்கள் பயன்படுத்தும் பெருங்காயம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை கண்டறியலாம்.