கனடாவை ஆளப்போவது தமிழக பெண்ணா?. கனடா பாராளுமன்றத்தில் முதல் இந்திய பெண்!. யார் அந்த அனிதா ஆனந்த்?
Anita Anand: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ததையடுத்து, அடுத்த பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் தேர்ந்தெடுக்கபடவுள்ளதாக தெரிகிறது. அதன்படி, தமிழை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் (57) பிரதமரானால், கனடா நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்துப் பெண் ஆவார். தற்போது, போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக உள்ளார். முன்னதாக, அவர் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார்.
அனிதா நோவா ஸ்கோடியாவின் கென்ட்வில்லில் பிறந்தார். அனிதாவின் தாய் சரோஜ் டி ராம் மற்றும் தந்தை எஸ்வி ஆனந்த் ஆகியோர் மருத்துவர்கள். அனிதாவின் தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆனால் தாயார் பஞ்சாபை சேர்ந்தவர். அனிதா ஆனந்துக்கு கீதா, சோனியா என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர். அனிதாவும் அவரது கணவர் ஜானும் தங்கள் 4 குழந்தைகளை ஓக்வில்லேயில் வளர்த்ததாக கனேடிய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனிதா ஆனந்த் குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் BA பட்டமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும் பெற்றவர். அதன் பின்னர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் BL பட்டம் பெற்றுள்ளார்.
தற்போதைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ 2025-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாகவே பதவி விலகும் முடிவை அறிவித்ததனால் ஆளும் லிபரல் கட்சி தனக்கு பதிலாக ஒருவரை தேர்ந்தெடுக்கும் வரை தனது பதவியில் நீட்டிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த அறிவிப்பு காரணமாக கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்ற வியூகங்கள் தொடங்கியுள்ளன. அதன் படி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனிதா 2019 இல் அரசியலில் நுழைந்தார் மற்றும் லிபரல் கட்சியின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவர். பிரதமர் பதவிக்கு அனிதா உட்பட 5 பேர் பிரதமர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், மார்க் கார்னே, மெலனி ஜோலி, பிரான்சுவா பிலிப் ஷாம்பெயின் ஆகியோரும் பிரதமர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர். அனிதா பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக இருந்தபோது கோவிட் தடுப்பூசியை நாட்டிற்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவர் 2021 இல் கனடாவின் பாதுகாப்பு அமைச்சரானார்.
அனிதா ஆனந்த் இதுவரையில் பல பதவிகளை வகித்துள்ளார். அவர் முதன்முதலில் 2019-ஆம் ஆண்டில் ஓக்வில்லி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்னர் ட்ரஷரி போர்டின் தலைவராகவும், தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். 2020-ஆம் ஆண்டில் கோவிட் 19 தொற்றுநோய் ஏற்பட்ட போது பப்ளிக் சர்வீஸ் & ப்ரக்யூர்மென்ட் அமைச்சராக பணிபுரிந்தார். அப்போது கன்னடியர்களுக்கான தடுப்பூசிகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், விரைவாக சோதனைகளை எடுப்பதற்கான செயல்முறைகளுக்கு பெரிதும் பங்களித்தார். அதன் பின்னர் தேசிய பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார். அப்போது அனிதா ராணுவத்தில் ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.
அதோடு சேவை செய்யும்போது அனைவரின் நலனுக்காகவும் கன்னேடிய ஆயுதப்படைகளில் கலாச்சார மாற்றத்தையும் அறிமுகப்படுத்தினார். அதோடு உக்ரைனில் ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை தடுக்கும் பொருட்டு உக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ராணுவ உதவி மற்றும் பணியாளர்களை வழங்கும் முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார். 2024-ஆம் ஆண்டில் போக்குவரத்து அமைச்சராக அனிதா நியமிக்கப்பட்டார். அரசியல்வாதியாக மட்டுமின்றி, அறிஞர், வழக்கறிஞர் மற்றும் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். டொரன்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப்பேராசிரியராகவும் பணியாற்றியவர் அனிதா ஆனந்த்.