புதிய சர்ச்சை... TNPSC தேர்வு அறிவிப்பில் சமஸ்கிருதம் கட்டாயமா..? அன்புமணி ராமதாஸ் கேள்வி...
தொல்லியல் பணிகளுக்கு சமஸ்கிருதம் கட்டாயமா? தமிழக அரசே சமஸ்கிருதத்தை திணிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுக்கான அறிவிக்கையில் உதவி காப்பாட்சியர் (தொல்லியல்) பணிக்கு சமஸ்கிருத பட்டப்படிப்புடன் திராவிட மொழிகள் மற்றும் பண்டைய இந்திய வரலாறு பற்றிய அறிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்; புதுக்கோட்டை அரசு அருங்காட்சியத்தின் உதவி காப்பாட்சியர் பணிக்கு சமஸ்கிருத பட்டப்படிப்புடன் திராவிட மொழிகள் பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொல்லியல் பணிகளை மேற்கொள்வதற்கு சமஸ்கிருதப் பட்டமும், சமஸ்கிருத மொழி அறிவும் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அப்பட்டமான சமஸ்கிருதத் திணிப்பு. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தொல்லியல் துறை சார்பில் ஆய்வு செய்யப்படும் கல்வெட்டுகளில் கிரந்த எழுத்துகளின் பயன்பாடுகள் இருக்கும். ஆனால், தொல்லியல் அறிவும், தமிழ்ப்புலமையும் உள்ளவர்களால் கிரந்த மொழியை நன்றாக புரிந்து கொள்ள முடியும். அதற்கு சமஸ்கிருதப் பட்டப் படிப்பு தேவையில்லை. தமிழகத்தில் தொல்லியல் துறையில் உயர்பதவிகளில் இருப்பவர்கள் எவரும் சமஸ்கிருதம் படித்து பணியில் சேரவில்லை. பணியில் சேர்ந்த பின் கிடைத்த அனுபவத்தின் மூலம் கிரந்த எழுத்துகள் குறித்த அறிவை வளர்த்துக் கொண்டனர். தொல்லியல் துறை பணிகளுக்கான ஆள்தேர்வு விதிகளில் கூட சமஸ்கிருதம் கட்டாயம் எனக் குறிப்பிடப்படவில்லை.
மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் இந்தியத் தொல்லியல் துறை, தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனத்தில் 2 ஆண்டு தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்புக்கான அறிவிப்பை 2020-ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்தப் படிப்புக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியில் தமிழ் மொழி சேர்க்கப்படவில்லை. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து தமிழ்மொழியை தொல்லியல் படிப்புக்கான தகுதி மொழியாக மத்திய அரசு சேர்த்தது. மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனத்தில் தமிழைப் படித்தவர்கள் தொல்லியல் ஆய்வை மேற்கொள்ள முடியும் எனும் போது, தமிழ்நாட்டில் தொல்லியல் பணிக்கு தமிழ் போதாது; சமஸ்கிருதம் வேண்டும் என்பது அப்பட்டமான சமஸ்கிருதத் திணிப்பு ஆகும்.
2019-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி இதே தொல்லியல் துறையில் அருங்காட்சியகங்களுக்கான உதவி காப்பாட்சியர் பணிக்கு ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதற்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், தமிழை வளர்ப்போம்; சமஸ்கிருதத்தை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் என்று வீர வசனம் பேசும் திமுக ஆட்சியில் சமஸ்கிருதம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழக ஆட்சியாளர்களின் தமிழ்ப் பற்றும், சமஸ்கிருத எதிர்ப்பும் போலியானது என்பது அம்பலமாகிவிட்டது.
சமஸ்கிருதம் வழக்கொழிந்த மொழி என்பது தான் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. அவ்வாறு இருக்கும் இருக்கும் போது சமஸ்கிருதப் பட்டம் படித்தவர்கள் தமிழகத்தில் எங்கிருந்து கிடைப்பார்கள்? சமஸ்கிருதம் படித்தவர்களை தொல்லியல் துறையில் திணிப்பதற்காகவே இத்தகைய புதிய கல்வித் தகுதிகளை தமிழக அரசு திணிக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது. எனவே, டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட ஆள்தேர்வு அறிவிக்கையை உடனடியாக திரும்பப் பெற்று, சமஸ்கிருதம் கட்டாயத் தகுதி என்ற பகுதியை நீக்கிவிட்டு, தொல்லியல் மற்றும் செம்மொழி தமிழை கட்டாய தகுதியாக அறிவித்து புதிய அறிவிக்கையை வெளியிட தமிழக அரசு ஆணையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.