மீண்டும் திறக்கப்படுகிறதா ஸ்டெர்லைட் ஆலை...? உச்ச நீதிமன்ற கருத்தால் பரபரப்பு...! ஜவாஹிருல்லா எதிர்ப்பு...
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற கருத்து மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில்; நான்கு வருடங்களுக்கு முன்பு, தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்கும் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று போராடி 13 பேர் இன்னுயிர் இழந்தனர். இந்த தியாகங்களுக்கு பிறகே, இந்த கொடிய ஸ்டெர்லைட் ஆலை 2018 ஆண்டு முதல் மூடப்பட்டது. மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தொடங்கும் வழியை பரிந்துரை செய்யுமாறு, தமிழக அரசுக்கும் மற்றும் அதன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளத பெரும் அதி்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
"தேசிய நலனைப் புறக்கணிக்க முடியாது எனவும், நாட்டில் ஒரு சில தாமிர உருக்காலைகள் மட்டுமே உள்ளதால், இந்த ஆலையை மூடுவதை விட்டு, இதை மறுபடியும் திறக்க தேவையான முன்னெடுப்புகளை பரிந்துரைக்கவும்" என உச்சநீதிமன்ற அமர்வு சமீபத்தில் கூறியுள்ளது. மேலும், 2020 இல் சென்னை உயர் நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகளை நிறுத்த பிறபித்த உத்தரவு முற்றிலும் தவறானது என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது, ஆலை மூடப்பட்டு விட்டது என நினைத்து வாழும் தூத்துக்குடி வாழ் மக்களுக்கு பெரும் இடியாக அமைந்துள்ளது.
ஸ்டெர்லைட்டின் 400,000 டன் ஆண்டுத் திறன் கொண்ட உருக்காலை விரிவாக்கத்திற்கு எதிராக தான் இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடைபெற்ற ஒரு வாரம் கழித்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், மாநில அரசும் "மாசு ஏற்பட்டதாகக்" கூறி ஆலையை மூட உத்தரவிட்டது. நாட்டில் ஒரு சில உருகு ஆலைகள் மட்டுமே உள்ளதால், நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, ஆலையில் இருக்கும் பிரச்சினையை தீர்த்து, அதனை மறு செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அப்பகுதி மக்களின் உடல்நலம் குறித்தும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் கவலை கொள்ளாதது வருத்தமளிக்கிறது.
2010 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில், இதே உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை கடந்த 15 ஆண்டுகளில் ஏற்படுத்திய சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகளுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து, உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. ஸ்டெர்லைட் காப்பர் - வேதாந்தா நிறுவனம் அப்பகுதி மக்களின் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து எந்த அக்கறையுமின்றி செயல்பட்டதால்தான் அந்நிறுவனம் மூடப்பட்டது. அதை சரிசெய்து மீண்டும் திறக்கும் நோக்கில் குழு அமைப்பதை அறிவுறுத்தி இருப்பதை அறவே ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஒரு நிரந்தர தீர்வை தராது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தானே முன்வந்து அளித்த சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையில் (Environment Impact Assessment Report), தொழிற்சாலை இயங்கும், "ஸ்மெல்ட்டர்" எனப்படும் "உருகு ஆலை" ஒவ்வொரு நாளும் 5,000 டன்களுக்கு மேல் காப்பர் கான்கிரீட், 94 டன் எரிபொருள் எண்ணெய், மூன்று டன் டீசல் மற்றும் 40 டன் நிலக்கரி ஆகியவற்றை எரித்து, புகைபோக்கி அடுக்குகள் மூலம் புகையை வெளியேற்றுகிறது. இவை அனைத்தையும் விட, கன உலோகங்கள் மற்றும் ஃபுளூரைடுகள் நிறைந்த கழிவுகளை வெளியேற்றுவதுடன், தூசி துகள்கள் காற்றில் கலப்பதால், மண்,நீர் மற்றும் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணியாக உள்ள PM2.5 - சல்பர் டை ஆக்சைடும் வெளியாகி மாசு படுத்துகிறது.
முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்னவெனில், ஸ்டெர்லைட் யூனிட் இயங்கிக்கொண்டிருந்த மார்ச் 2018 இல் 56% ஆக இருந்த காற்று "மாசு நிறைந்த நாட்களின் அளவு" 2018-19 ஆம் ஆண்டில் 27% ஆகக் குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில், ஆலை மூடப்பட்ட பிறகு ‘சுத்தமான காற்று’ உடைய நாட்களின் எண்ணிக்கை 44% லிருந்து 73% ஆக அதிகரித்தது. இதிலிருந்தே, மக்களின் போராட்டம் நியமானது தான் என நம்மால் புரிந்து கொள்ள முடியும். தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம், என அறிவித்த பிறகும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கும் இத்தகைய கருத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்த கூடிய கருத்தாக உள்ளது.
திராவிட மாடல் அரசு, இந்த ஆலை மூடும் விஷயத்தில், சட்டபூர்வமாக அணுகி, தூத்துக்குடி மக்களின் உணர்வுகளோடு உடன் நிற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தமிழக மண்ணில், ஸ்டெர்லைட் காப்பர் - வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி இல்லை என்பதனை, திட்டவட்டமாக தமிழக முதலமைச்சர் அறிவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.