ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு பின்னணியில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதா? என்ஐஏ விசாரணை!
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டல் குண்டு வெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதியின் சதி இருக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.
ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1-ம் தேதி குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இருந்த முக்கிய குற்றவாளிகளான அப்துல் மதீன் தாஹா மற்றும் முசாவிர் ஹுசைன் ஷாஜிப் ஆகியோரை கொல்கத்தாவின் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அப்துல் மதீன் தாஹா மற்றும் முசாவிர் ஹுசைன் ஷாஜிப் ஆகியோருக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவருடன் தொடர்பு இருந்துள்ளதாக என்ஐஏ கண்டறிந்துள்ளது. குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்ட அப்துல் மதீன் தாஹா, முசாவிர் ஹுசைன் ஷாஜிப் ஆகியோர் பாகிஸ்தானின் கர்னல் என்ற குறியூட்டு பெயருடன் தொடர்புடையவர்கள் என்பது தற்போது என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அது மட்டுமின்றி அவர்கள் ஐஎஸ்-அல்-ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்போடு தொடர்பில் இருந்ததாக என்ஐஏவுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, ராமேஸ்வரம் கஃபே ஓட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதா என என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் இதுபோன்ற சிறு குழுக்களை உருவாக்கி, அதில் இளைஞர்களைச் சேர்த்து இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதுதான் அவரது திட்டம். கடந்த மார்ச் 1-ம் தேதி ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பிலும் இவர் இருந்ததாக என்ஐக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, வழக்கு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.