"ஏய் மடையா..." இப்படி யாராவது திட்டினால், இனி கோபம் வராது.! ஏன் தெரியுமா.!
நாம் கோபத்தில் சிலரை பல வார்த்தைகள் கூறித் திட்டி விடுவோம். ஆனால் அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்காது. பல நேரங்களில் கெட்ட வார்த்தைகளாக அல்லது தகாத வார்த்தைகளாக அர்த்தம் கொள்ளப்படும் சொற்களுக்கு உண்மையான அர்த்தங்கள் வேறு மாதிரியாக இருந்திருக்கின்றன. அப்படி பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் தான் "மடையன்". இதனை நாம் ஒருவரை முட்டாள் என்று குறிப்பதற்கோ அல்லது அறிவு கெட்டவர்கள் என்று குறிப்பதற்கோ பயன்படுத்துகிறோம்.
ஆனால் உண்மையிலேயே இந்த சொல்லிற்கு வரலாற்றில் வேறு ஒரு அர்த்தம் இருக்கிறது. பண்டைய காலத்தில் மடையன் அல்லது மடையர்கள் என்றால் வீரம் நிறைந்த செயல் புரிபவர்கள் என்று அர்த்தம் இதற்கு ஆழமான வரலாற்று காரணிகளும் பின்னணிகளும் இருக்கின்றன. பண்டைய காலங்களில் மழை மற்றும் வெள்ளங்களின் போது ஏற்படும் பெருவாரியான நீரினை சேர்த்து வைப்பதற்காக ஏரிகள் அமைக்கப்பட்டன. கடும் மழை மற்றும் வெள்ளங்களின் போது இந்த ஏரிகள் உடையாமல் அவற்றிலிருந்து நீரை வெளியேற்றுவதற்காக தமிழர்கள் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம் தான் மடை.
இந்த மடைக்கு ஆரம்ப காலத்தில் பனை மரங்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை வைத்து தான் ஏரியின் மடைகள் அடைக்கப்பட்டிருக்கும். பின் நாட்களில் பனை மரங்களுக்கு பதிலாக பாறைகள் மற்றும் கட்டைகள் பயன்படுத்தப்பட்டன. புயல் மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் இந்த மடை திறப்பது என்பது மிகவும் ஆபத்தான செயலாகும். இந்த மடைகளை திறப்பதற்கு என்று பிரத்தியேகமான வீரர்கள் இருந்தனர் . புயல் மற்றும் மலை வெள்ளக் காலங்களில் இவர்கள் தான் ஏரியிலும் மூழ்கி மடையை திறப்பார்கள்.
மடை திறக்கும் போது பாய்ந்து வரும் நீர் அதனை திறப்ப வரையும் அடித்துச் செல்லக்கூடும். அதிலிருந்து தப்பி பிழைப்பது என்பது சாகசமான ஒரு செயல். இதனால் மடைதிறப்பு பணியில் அமர்த்தப்படுகிறவர்கள் நடை திறப்பதற்கு முன்பு தங்கள் பிள்ளை குட்டிகள் குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்களை சந்தித்து பிரியா விடைபெற்றே செல்வார்கள். இது போன்ற சாகசம் நிறைந்த வேலையை செய்பவர்கள் தான் பண்டைய காலங்களில் மடையர்கள் என அழைக்கப்பட்டனர். எனவே இனி யாராவது உங்களை மடையர்கள் என்று திட்டினால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லுங்கள் நான் மடையர் தான் என்று.