அரசை வழி நடத்துவது சட்டமா..? சாதியா..? திமுகவுக்கு எதிராக விசிக ஒட்டிய போஸ்டர்..!! கூட்டணியில் மீண்டும் சலசலப்பு..!!
தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் கொலை, கொள்ளை, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, கஞ்சா போதை ஆசாமிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. இதையேதான், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதன் காரணமாக திமுக அரசின் மீது பொதுமக்கள் மட்டுமின்றி அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதன் வெளிப்பாடாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் இடதுசாரி கட்சிகள், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அண்மைக் காலமாக திமுகவை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் திமுக அரசை விமர்சித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசையும், போலீசையும் வழி நடத்துவது சட்டமா? அல்லது சாதியா? என்று கேள்வி எழுப்பி விழுப்புரம் தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அண்மைக் காலமாக பட்டியலினத்தவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும், வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
இதனைத் தடுக்க வேண்டிய திமுக அரசும், காவல்துறையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதோடு, தலித் மக்களின் மீது பொய் வழக்குகளை போட்டு வருவதாகவும், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலேயே கூட்டணிக் கட்சியான திமுக அரசை விமர்சித்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.