மனைவியுடன் கணவன் கட்டாய உடலுறவு கொண்டால் குற்றமா? உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்..!!
மனைவியை கட்டாயப்படுத்தி கணவன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை கற்பழிப்பாக கருத முடியாது என்று இந்திய தண்டனை சட்டத்தின் 375-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இந்த சட்டம் செல்லுமா என்பதை முடிவு செய்யப்போவதாக உச்ச நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது.
மனைவியுடன் கணவன் கட்டாய பாலுறவு கொள்வது அல்லது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமல்ல என பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 375, விதிவிலக்கு 2 கூறுகிறது. இந்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தீர்ப்பளிக்கக் கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கருணா நண்டி, பாலியல் செயலில் பெண்ணின் சம்மதம் மிகவும் முக்கியம் என வாதிட்டார். அப்போது குறிக்கிட்ட தலைமை நீதிபதி, ஒருவர் தன் மனைவியிடம் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டதாக நீதித் துறை அறிவித்தால் அது புதிய குற்றமாக உருவாக்குமா என்று கேள்வி எழுப்பினார். பாலியல் வன்கொடுமை என்பதற்கான வரையறையை எவ்வாறு நிர்ணயிப்பது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த கருணா நண்டி, "பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 375-ல் உள்ள விதிவிலக்கு 2, பெண்ணின் உரிமையை பறிக்கிறது. பாலியல் வன்கொடுமையால் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்பு, கணவனாக இருந்தாலும், வேறு நபராக இருந்தாலும் ஒன்றுதான். ஒரு பெண் லிவ்-இன் உறவில் இருந்தால், சம்மதமின்றி பாலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படுகிறது.
ஆனால், ஒரு திருமணமான பெண் மீண்டும் மீண்டும் மிகக் கொடூரமான செயலுக்கு கணவனால் உள்ளானால் அது பாலியல் வன்கொடுமை அல்ல என்று சட்டம் கூறுகிறது. திருமண உறவில் இருக்கும் பாலியல் வன்கொடுமை விதிவிலக்கு, பாலின சமத்துவத்தை மீறுவதாக உள்ளது என வாதாடினார். மேலும் , இதனை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுமாறு தனது வாதத்தி வலியுறுத்தினார்.
மனைவியுடனான பாலியல் வன்கொடுமையை குற்றமாகக் கருதுவது திருமண உறவை பாதிக்கும் என மத்திய அரசு கூறி இருப்பதற்கு பதில் வாதத்தை முன்வைக்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார். இதையடுத்து வாதிட்ட கருணா நண்டி, திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாப்பது திருமணம் எனும் நிறுவனத்தை அழிக்காது என்றும், திருமணம் தனிப்பட்டது; நிறுவன ரீதியானது அல்ல என்றும் குறிப்பிட்டார்.
மனுதாரரின் வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், சட்ட பாதுகாப்பு அளிப்பதை ரத்து செய்துவிட்டால், அதன்பிறகு, கட்டாய உறவில் ஈடுபடும் கணவர்களை பலாத்கார சட்டப்பிரிவின்கீழ் விசாரிக்க வேண்டுமா? அல்லது இதற்கென தனியான குற்றத்தை கோர்ட்டு உருவாக்க வேண்டுமா என்பது குழப்பமாக உள்ளது.
கணவனுக்கான சட்ட பாதுகாப்பு, அரசியல் சாசனம் அளிக்கும் சமத்துவ உரிமை, வாழ்வுரிமை, தனியுரிமை ஆகியவற்றை மீறுவதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், இந்த சட்டப்பிரிவை நிறைவேற்றியபோது, மனைவியுடன் கணவன் கட்டாய உறவில் ஈடுபடுவது பலாத்காரம் அல்ல என்பதுதான் நாடாளுமன்றத்தின் கருத்தாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் இது, அரசியல் சாசனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும்.
எங்கள் முன்பு 2 தீர்ப்புகள் இருக்கின்றன. கணவனுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கும் சட்டப்பிரிவு செல்லுமா என்பதுதான் மைய பிரச்சினை. அதுபற்றி முடிவு செய்வோம் என நீதிபதிகள் கூறினர். மேலும் மத்திய அரசின் பதில் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மனுதாரர்களை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
Read more ; குழந்தை திருமணம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு..!! நீதிபதி சந்திரசூட் கூறியது என்ன?