’கொட்டுக்காளி’ படம் தோல்வியை சந்திக்க இவர் தான் காரணமா..? சிவகார்த்திகேயன் தான் இதை செய்தாரா..?
காமெடி நடிகராக பல படங்களிலும் நடித்து வந்த சூரியை வெற்றிமாறன் தனது 'விடுதலை' படம் மூலம் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார். அப்படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சூரியின் நடிப்பு வேறு ஒரு பரிமாணத்தில் இருந்தது. அதற்கு காரணம் வெற்றிமாறன். பின்னர், கருடன் என்கிற ஹிட் படத்தையும் கொடுத்தார் மாரி. அதோடு, சமீபத்தில் கொட்டுக்காளி படமும் திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தை பிஎஸ் வினோத்ராஜ் என்பவர் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே தனது கூழாங்கல் திரைப்படம் மூலம் பிரபலமானவர். குறும்படமா?, சினிமாவா? என கண்டுபிடிக்க முடியாதபடி இவரின் படங்கள் இருக்கும். கொட்டுக்காளி திரைப்படம் நிறைய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றது. எனவே, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
அதோடு, இயக்குனர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், பாலா போன்றவர்களும் இப்படத்தை மிகவும் பாராட்டி பேசியிருந்தனர். அதேநேரம், கருடனை மனதில் நினைத்துகொண்டு இப்படத்தை பார்க்க வராதீர்கள் என சூரியும் கூறியுள்ளார். இப்படத்தை சூரியின் நண்பரும், நடிகருமான சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். எனவே, இப்படத்தை புரமோட் செய்த செய்தியாளர் சந்திப்பையும் அவர் நடத்தினார்.
கடந்த 23ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியது. கமர்ஷியல் படத்தை எதிர்பார்த்து தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் ஏமாந்துபோனார்கள். இந்த படத்தில் பின்னணி இசை கூட இல்லை. அதோடு, இந்த படத்தோடு வெளியான வாழை திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்நிலையில், விழா ஒன்றில் பேசிய இயக்குனர் அமீர், ”கொட்டுக்காளி படத்தை திரைப்பட விழாக்களில் திரையிடலாம். அதை வெகுஜனங்கள் பார்க்கும் திரையரங்களில் திணித்திருக்கக் கூடாது. இப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்திருக்க வேண்டும். மேலும், வாழை படத்தோடு கொட்டுக்காளியை ரிலீஸ் செய்திருக்கக் கூடாது” என தெரிவித்திருந்தார்.