கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களின் உயிருக்கு ஆபத்தா?… வதந்திகளை நம்பவேண்டாம்!… சென்னை மருத்துவர் விளக்கம்!
Covishield: கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள் பலர் கடும் அச்சத்தில் உள்ளநிலையில், பக்கவிளைவு பாதிப்புகளை ஒப்பிடுகையில் அரிதிலும் அரிதாக ஒரு சிலருக்கே ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை ரெய்லா மருத்துவமனையின் மருத்துவர் அஷோக் குமார் விளக்கமளித்துள்ளார்.
கொரோனா பரவலுக்குப் பிறகு, ஆக்ஸ்ஃபோர்ட்-அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மற்றும் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிகள் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. உலகெங்கிலும் உள்ள நாடுகள் இந்த தடுப்பூசியை தங்கள் குடிமக்களுக்கு தொடர்ந்து வழங்குவதால், அரிதான பக்க விளைவுகள் பற்றிய அறிக்கைகள் வெளிவந்துள்ளன, இதில் த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (TTS) எனப்படும் நிலையும் அடங்கும்.
இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரெய்லா மருத்துவமனையின் மருத்துவர் அஷோக் குமார், கோவிஷீல்டு தடுப்பூசிப் போட்டுக்கொண்ட நபர்களில் லட்சத்தில் ஒருவருக்கே பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் தேவையற்ற வதந்திகளை நம்பி பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் கூறியுள்ளார். இந்தியாவில் மட்டும் அல்ல உலக அளவில் மாரடைப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் பொதுவாக இருக்கும் சூழலில், கோவிஷீல்டு தடுப்பூசிப் போட்டுக்கொண்ட நபர்களுக்குதான் இதுபோன்ற ஆபத்துக்கள் வருவதாக எந்த ஆய்வும் குறிப்பிடவில்லை எனவும் கூறியுள்ளார்.
கோவிஷீல்டு தடுப்பூசியால் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்ததாகவும், இதனோடு பக்கவிளைவு பாதிப்புகளை ஒப்பிடுகையில் அது அரிதிலும் அரிதாக ஒரு சிலருக்கே ஏற்பட வாய்ப்பு என அசோக் குமார் கூறியுள்ளார். மேலும், பலருக்கு உடல் உழைப்பு இன்மை. மது பழக்கம், முறையற்ற உணவு பழக்க வழக்கம் உள்ளிட்ட பலவற்றால்தான் மாரடைப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் வருவதாகவும், அதை கோவிஷீல்டு தடுப்பூசியுடன் தொடர்பு படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் இதன் மீதாக ஏற்பட்டுள்ள அச்சத்தில், அதை யோசித்து யோசித்து வரும் மன ரீதியான பாதிப்புகளே அதிகம் எனவும், கோவிஷீல்டு தடுப்பூசி பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.