கோவிட்-19 தொற்றாக மாறுகிறதா Mpox?. பொதுமுடக்கம் சாத்தியமா?. விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
Mpox: 2019இல் சீனாவில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று 2020, 2021 என இரு ஆண்டுகள் உலகையே ஆட்டிப்படைத்தது. அதனால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. உலகளாவிய ஆராய்ச்சியாளர்களால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த பெருந்தொற்றில் இருந்து மக்கள் மீண்டு வந்தனர். தற்போதும் அதன் பாதிப்புகள் உலகில் ஆங்காங்கே இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இப்படியான சூழலில், ஆப்ரிக்கா நாட்டில் தற்போது பரவி வரும் குரங்கம்மை எனும் MPox தொற்று உலக சுகாதார அமைப்பையே சற்று உற்றுநோக்க வைத்துள்ளது. இந்த MPox-ஆல் மீண்டும் ஓர் ஊரடங்கு நிலை ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடும் அளவுக்கு இதன் தொற்று வேகம் தற்போது ஆப்பிரிக்காவில் சற்று அதிகரித்துள்ளது.
ஆப்பிரிக்காவில் காங்கோவில் கடந்த 2023 செப்டம்பரில் குரங்கம்மை தொற்று வேகமாகப் பரவ தொடங்கியது. அங்கு தான் தற்போது வரையில் குரங்கம்மையால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இறப்பு விகிதம் அதிகம் இல்லை என்றாலும் கர்ப்பிணிப் பெண்கள், வயதானோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு குரங்கம்மை தொற்று பாதிப்பு அதிகம் இருக்கும் என சுகாதார அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகளவில் குரங்கம்மை தொற்று என்பது பெரிய அளவில் கண்டறியப்படவில்லை என்றாலும், ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் குரங்கம்மை பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதனால், மற்ற நாடுகள் தங்கள் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தற்போது தீவிரப்படுத்தி வருகின்றன.
கோவிட்-19 போன்று எம்பாக்ஸ் அதிகம் பரவக்கூடியது அல்ல. இரண்டு நோய்களும் நெருங்கிய தொடர்பு மூலம் பரவினாலும், கோவிட்-19 காற்றின் வாயிலாக வேகமாக பரவுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து இருமல், தும்மல், பேசுவது, பாடுவது அல்லது சுவாசிப்பது போன்றவற்றின் மூலம் கோவிட்-19 அடுத்தவருக்கு பரவலாம்.
எம்பாக்ஸ் பாதிக்கப்பட்ட நபருடன் மிக நெருக்கமான அல்லது நீடித்த தொடர்பினால் பரவுகிறது, அதாவது உடலுறவு, அசுத்தமான படுக்கை மற்றும் ஆடைகளுடன் தொடர்பு, மற்றும் நீண்ட நேரமாக நேருக்கு நேர் தொடர்பு ஆகியவற்றின் மூலம் பரவுகிறது.
கோவிட்-19 தொற்றுநோயின் தொடக்கத்தில் தடுப்பூசிகளை உருவாக்க பெரும் போட்டி நிலவியது. ஆனால் எம்பாக்ஸுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் தடுப்பூசிகள் இப்போது கிடைக்கின்றன. எம்பாக்ஸ் பெரியம்மை நோயுடன் தொடர்புடையது. பெரியம்மை என்பது 1980இல் தடுப்பூசி மூலம் உலகம் முழுவதும் ஒழிக்கப்பட்ட நோயாகும். பெரியம்மைக்கு எதிராக செயல்பட்ட தடுப்பூசிகள் குரங்கம்மைக்கு எதிரான பாதுகாப்பையும் அளித்தன. குறிப்பாக 2022இல் நோய் தொற்று பரவிய போது, பெரியம்மை தடுப்பூசி போடப்பட்டது.
"இது 100% பாதுகாப்பானது அல்ல, ஆனால் 2022 முதல் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் ஏற்பட்ட பெரிய பரவலின் அடிப்படையில், வயதானவர்களுக்கு தற்காப்பு தருகிறது. பெரியம்மை தடுப்பூசியால் அவர்கள் குரங்கம்மை பரவாமல் தடுப்பதற்கு, ஓரளவு பாதுகாப்பை பெறுகின்றனர்." என்று பேராசிரியர் ஆடம் கூறுகிறார்.
வைரஸ்கள் காலப்போக்கில் வீரியம் அடைந்து உருமாறுகின்றன, ஆனால் சில வைரஸ்கள் அதி வேகமாக மாறுகின்றன. எம்பாக்ஸ் டிஎன்ஏ வைரஸால் ஏற்படுகிறது மற்றும் கோவிட்-19 ஆர்என்ஏ வைரஸால் ஏற்படுகிறது. அமெரிக்கன் சொசைட்டி ஃபார் மைக்ரோபயாலஜி கூற்றுப்படி டிஎன்ஏ வைரஸ்கள், ஆர்என்ஏ வைரஸ்கள் போல சுதந்திரமாக உருமாறுவதில்லை.
எம்பாக்ஸ் வைரஸின் அறியப்பட்ட இரண்டு குடும்பங்கள் அல்லது கிளேடுகள் (clade) உள்ளன - கிளேட் 1 மற்றும் கிளேட் 2. SARS-CoV2 வைரஸ் 20 க்கும் மேற்பட்ட அறியப்பட்ட கிளேட்களைக் கொண்டுள்ளது. தற்போதைய பரவல் பெரும்பாலும் `கிளேட் 1 பி' எனப்படும் கிளேட் 1 வைரஸால் இயக்கப்படுகிறது.
"கிளாட் 1பி ரக வைரஸ் பெரும்பாலும் பாலியல் ரீதியான பரவுதலில் இருந்து வெளிவருகிறது. அதே சமயம் ஒரே வீட்டுக்குள் இருக்கும் நபர்களுக்கு மத்தியில் பரவுவதையும் நாங்கள் காண்கிறோம் : தாயிடமிருந்து குழந்தைக்கு, குழந்தைகளிடம் இருந்து பிற குழந்தைக்கு பரவும்" என்கிறார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி பேராசிரியர் ட்ரூடி லாங்.
கோவிட் தொற்றுநோயின் போது நாம் பார்த்தது போல, எம்பாக்ஸ் பரவல் பொது ஊரடங்கு சூழலை உருவாக்கும், உலகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் என்று பலர் கவலைப்படுகிறார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நோய் ஆப்பிரிக்காவின் 16 நாடுகளில் பரவியிருந்தாலும் எந்த எல்லைகளையும் மூட பரிந்துரைக்கப்படவில்லை. "ஆப்ரிக்காவின் நோய் பரவலை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பு மைய சிடிசி ஆய்வுகளின்படி எம்பாக்ஸ் மக்கள் மற்றும் பொருட்களின் இயக்கத்திற்கு இடையூறு விளைவிக்காது" என்று ஏஜென்சியின் தலைமை இயக்குeர் டாக்டர் ஜீன் கசேயா கூறினார்.
பாதிக்கப்பட்ட நபர்கள், பொருட்கள் அல்லது விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பதன் மூலம் தொற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். புண்கள் மற்றும் காயங்களைத் தொட்ட பிறகு, கைகளைக் கழுவுதல் அல்லது சானிட்டைசர்களை பயன்படுத்துவது குறித்தும் அறிவுறுத்தப்படுகிறது.
"தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்பதை நாங்கள் அறிவோம், எனவே தற்போது எங்களிடம் சிறந்த நோய் தடுப்பு கருவிகள் உள்ளன" என்கிறார். "எனவே, கோவிட் போன்ற ஒரு தொற்றுநோய் சூழல் ஏற்பட இம்முறை சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன்." என்கிறார் பேராசிரியர் ரோட்னி.