டயட்டில் இருப்பவர்களுக்கு சிக்கன் பெஸ்ட்டா..? முட்டை பெஸ்ட்டா..? எதில் புரதச்சத்து அதிகம்..?
உலகம் முழுவதும் உள்ள மக்களால் சிக்கனும், முட்டையும் விரும்பி சாப்பிடப்படும் உணவாகும். அதோடு, இதில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகளும், முக்கியமாக புரதமும் இருப்பதால் ஃபிட்னஸ் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களால் பெரிதும் பரிந்துரைக்கப்படும் உணவாக இவை இரண்டும் இருக்கிறது. இருப்பினும், இந்த இரண்டு உணவுகளில் எதில் அதிகம் புரதம் உள்ளது என்பது குறித்து நீண்ட நாளாகவே குழப்பம் இருந்து வருகிறது.
சிக்கனில், குறிப்பாக அதன் நெஞ்சுப் பகுதியில் அதிகளவு புரதச்சத்து உள்ளது. 3 அவுன்ஸ் சமைத்த சிக்கன் நெஞ்சுப் பகுதியில் 27 கிராம் புரதம் உள்ளதால், தினமும் புரதச்சத்து தேவைப்படுபவர்களுக்கான மிகச்சிறந்த உணவாக சிக்கன் இருக்கிறது. மேலும், இதில் குறைவான கொழுப்புகளே இருப்பதால் ஃபிட்னஸ் ஆர்வலர்களும் உடல்நலத்தின் மீது அக்கறை கொள்பவர்களும் சிக்கனை அதிகமாக சாப்பிடுகின்றனர்.
முட்டையை பொறுத்தவரை குறிப்பாக முட்டையின் வெள்ளைக் கருவில் அதிகம் புரதம் உள்ளது. ஒரு பெரிய முட்டையில் 6 கிராம் புரதச்சத்து உள்ளது. இவற்றில் அதிகளவு வெள்ளைக்கருவில் தான் உள்ளது. ஆனால், சிக்கனை விட குறைவான புரதமே முட்டையில் உள்ளது. ஆனாலும், அதிலுள்ள பலவித ஊட்டச்சத்து காரணமாக சரிவிகித டயட்டில் கட்டாயம் இடம்பெறக்கூடிய உணவாக முட்டை இருக்கிறது. தோலுரித்த சிக்கனை சாப்பிடும்போது நமக்கு லீன் புரொட்டீன், வைட்டமின், தாதுக்கள் போன்ற சத்துகள் கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி நம் ஒட்டுமொத்த உடல்நலத்திற்கும் ஆரோக்கியம் தரக்கூடிய நியாசின், செலனியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி போன்ற சத்துகளும் சிக்கனில் உள்ளது.
முட்டையை எடுத்துக் கொண்டால், அதில் புரொட்டீன், வைட்டமின், ஆரோக்கிய கொழுப்புகள் ஆகியவை உள்ளது. அதோடு சேர்த்து வைட்டமின் டி, வைட்டமின் பி12, ரிபோஃப்ளேவின், கோலின் உள்ளிட்ட ஊட்டச்சத்துகளையும் லூடீன், ஜியாஸாந்தின் போன்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட்களையும் கொண்டுள்ளது. சிக்கன் மற்றும் முட்டையில் அதிக தரமுள்ள புரதச்சத்து உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவை இரண்டிலும் நம் உடலுக்கு தேவைப்படும் அத்தியாவசிமான 9 அமினோ ஆசிட் உள்ளது. இதன் மூலம் தசைகளின் வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்த செல்களின் செயல்பாடுகளுக்கும் மதிப்பு வாய்ந்த உணவாக சிக்கனும், முட்டையும் இருக்கிறது.
சரி, எதில் புரதச்சத்து அதிகம் உள்ளது? சிக்கனா, முட்டையா? அதை முதலில் சொல்லுங்கள் எனக் கேட்கிறீர்களா? இரண்டு உணவுகளுமே தரமான புரதங்களையும், முழுமையான ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது. சிக்கனில் அதிகமான புரதங்கள் இருந்தாலும், முட்டையில் பல வகை வைட்டமின், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆகியவை உள்ளது. ஆகவே, உங்கள் டயட்டில் சிக்கனும், முட்டையும் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் பலவும் கிடைக்கிறது.
Read More : படுத்துக் கொண்டே செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள்..? பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்..!!